இலங்கை படுதோல்வி !

Thursday, October 31st, 2019


இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா 27 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் கம்மின்ஸ், ஸ்டான்லேக், அகர் மற்றும் எடம் ஷம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

பதிலுக்கு 118 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 13 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் டேவிட் வோர்னர் 60 ஓட்டங்களையும், ஸ்டீவன் ஸ்மித் 53 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் லசித் மாலிங்க இலங்கை அணி சார்பில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி ரி 20 போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 134 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.