இலங்கை அணி வெற்றி!

Sunday, August 18th, 2019


இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பெடுத்தாட்டத்தில் நியூஸிலாந்து அணி சார்பில் ரோஸ் டெய்லர் 86 ஓட்டங்களையும் ஹென்றி நிகலஸ் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 5 விக்கெட்டுக்களையும் சுரங்க லக்மால் 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அதனடிப்படையில் இலங்கை அணி நியூசிலாந்து அணியை விட முதல் இன்னிங்ஸில் 18 ஓட்டங்கள் முன்னிலை வகித்து.

துடுப்பெடுத்தாட்டத்தில் இலங்கை அணி சார்பில் திக்வெல்ல 61 ஓட்டங்களையும் மெண்டிஸ் 53 ஓட்டங்களையும் மெத்தியூஸ் 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் அஜாச் பட்டேல் 89 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 285 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

துடுப்பெடுத்தாட்டத்தில் நியூஸிலாந்து அணி சார்பில் பெரட்லி ஜோன் வெட்லின் 77 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் அம்புல்தெனிய 4 விக்கெட்டுக்களையும் தனஞ்சய டி சில்வா 3 விக்கெட்டுக்களையும் லஹிரு குமார 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 267 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டகளை பெற்று முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.

தடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன தனது 9 ஆவது டெஸ்ட் சதத்துடன் 122 ஓட்டகளையும் லஹிரு திரிமாண்ண 64 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

Related posts: