இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி: புதிதாக விண்ணப்பித்துள்ள ரொம் மூடி!

Friday, August 2nd, 2019

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடியும் இணைந்துள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளர்களாக இருக்கும் ரவி சாஸ்திரி, பரத் அருண், சஞ்சய் பாங்கர், ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலம் உலகக்கோப்பை தொடருடன் முடிவடைந்தது.

அதனைத் தொடர்ந்து, இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தெரிவு செய்யும் பணியில் பி.சி.சி.ஐ இறங்கியுள்ளது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கபில்தேவ், அன்ஷுமன் கெயிவாட், சாந்தா ரங்கசாமி உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களை, வரும் ஆகஸ்ட் மாதம் 13 அல்லது 14ஆம் திகதி நேர்காணல் நடத்த உள்ளனர்.

புதிய பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்த நிலையில், நேற்றுடன் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் முடிந்தது.

இதற்கிடையில், புதிதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டாம் மூடி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

ஐ.பி.எல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பயிற்சியாளராக இருந்த இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்.

முன்னதாக இலங்கையின் ஜெயவர்த்தனே, நியூசிலாந்தின் மைக் ஹெசன் போன்ற வெளிநாட்டு வீரர்களும், இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங், ஜிம்பாப்வே அணியின் தற்போதைய பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட் ஆகியோரும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

Related posts: