அடுத்த மலிங்கா பெரியசுவாமி?

Saturday, August 17th, 2019


2019 டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பெரியசுவாமி, இலங்கையின் மலிங்காவைப் போல் பந்துவீசுவதுடன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, டி20 போட்டியை தவிர்த்து ஏனைய போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ளார். அத்துடன் 2020ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண தொடருடன் ஒட்டுமொத்தமாக ஓய்வு பெற உள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பெரியசுவாமி என்ற வேகப்பந்து வீச்சாளர், மலிங்காவின் பாணியை அப்படியே பின்பற்றுகிறார். இவரது அபார பந்துவீச்சினால் வெற்றிகளை குவித்த சேப்பாக் கில்லீஸ் அணி, 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

டி.என்.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடிய பெரியசுவாமி, இறுதிப்போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். மொத்தம் இந்த தொடரில் அவர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இதுவரை டி.என்.பி.எல் தொடரில் ஒரு வீரர் 17 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதனை பெரியசுவாமி முறியடித்துள்ளார்.

மலிங்காவின் பாணியை பின்பற்றும் பெரியசுவாமி, அவரது உடல் மொழி மட்டுமில்லாது, நுணுக்கங்களிலும் அவரையே பின்பற்றி வருகிறார். இறுதிப்போட்டியில் மின்னல் வேகத்தில் பந்துவீசிய பெரியசுவாமி, எதிரணி வீரரின் ஸ்டம்பை சிதறடித்தார்.

டி.என்.பி.எல் தொடரில் பெரிய அளவில் கவனம் ஈர்த்த பெரியசுவாமி, அடுத்ததாக ஐ.பி.எல் தொடரிலும் விளையாடுவார் என்று கருதப்படுகிறது.

Related posts: