ஹத்துருசிங்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை இல்லை –  பங்களாதேஸ் கிரிக்கெட் சபை!

Friday, December 1st, 2017

பங்களாதேஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராகவும் நியமிக்கப்படவுள்ள சந்திக்க ஹத்துரு சிங்க மரியாதை நிமித்தமான பயணமொன்றை பங்களாதேசுக்கு மேற்கொள்ளவுள்ள அதே நேரம் அவருக்கு எதிரான எவ்வித சட்ட நடவடிக்கையையும் எடுக்கப் போவதில்லையென பங்களாதேஸ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பங்களாதேஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள சந்திக்க ஹத்துரு சிங்க அண்மையில் தனது பதவியை திடீரென இராஜிநாமா செய்தார். இது பங்களாதேஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பங்களாதேஸ் அணி கடந்த 5 வருடங்களில் மிகச் சிறந்த அணியாக திகழ்வதுடன், உலகின் முன்னணி அணிகளுக்கு சவாலளிக்கக் கூடிய வகையில் மிகச் சிறந்த அணியாக ஹத்துருசிங்கவால் கட்டியெழுப்பப்பட்டது.

இந்த நிலையில் அவரை இழப்பதற்கு பங்களாதேஸ் அணி தயாராக இல்லை. இதனால், அவரை இலங்கை செல்ல வேண்டாமென வலியுறுத்தி வந்ததுடன், அவர் இலங்கை சென்றுவிடுவேன் எனக் கூறி இராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க பங்களாதேஸ் கிரிக்கெட் சபை தீர்மானித்திருந்தது.

தனது இராஜிநாமா கடிதத்தை கையளித்த நாள் முதல் கிரிக்கெட் சபையுடனான அனைத்துத் தொடர்புகளையும் ஹத்துரு சிங்க துண்டித்திருந்தார். இந்த நிலையில், அவர் சார்பில் இலங்கை கிரிக்கெட் சபை பங்களாதேஸ் கிரிக்கெட் சபையை சமாளிக்கும் பேச்சுக்களை ஆரம்பித்திருந்தது.

ஹத்துரு சிங்கவை தங்களுக்கு விட்டுத் தருமாறு இலங்கைக் கிரிக்கெட் சபை வினயமாக வேண்டுகோள் விடுத்திருந்தது. இதையடுத்து பங்களாதேஸ் அணி அடுத்த விக்கெட் தொடருக்கு புறப்பட முன்னர் அடுத்த மாத முற்பகுதியில் ஹத்துருசிங்க பங்களாதேசுக்கு மரியாதை நிமித்தமான பயணமொன்றை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஹத்துருசிங்க தங்களுடனான ஒப்பந்தத்தை மீறியதற்கு எதிராக மேற்கொண்டிருந்த சட்ட நடவடிக்கையை கைவிடுவதாக தற்போது பங்களாதேஸ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கைக் கிரிக்கெட் சபையின் நடவடிக்கையின் மூலமே இது சாத்தியப்பட்டது. இதற்கமைய ஹத்துரு சிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை பங்களாதேஸ் கிரிக்கெட் சபை அடுத்த ஒரு சில தினங்களில் வாபஸ் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: