ஹதுருசிங்கவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம்- திலான் சமரவீர!

பங்களாதேஷ் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலான் சமரவீர, அவ்வணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஹதுருசிங்கவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இளம் பங்களாதேஷ் அணிக்கு புது இரத்தம் பாய்ச்சும் வகையில், புதிய துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்களை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அண்மையில் நியமித்தது. அதன் படி, திலான் சமரவீர மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் (பந்துவீச்சாளர்) கொர்ட்னி வோல்ஷ் ஆகியோர் பயிற்சியாளர்களாக இணைந்து கொண்டனர்.
இதற்கமைய புதிய பயிற்சியாளர்களின் கீழ், வீரர்களுக்கான வலைப்பயிற்சிகள் வார இறுதியில் ஆரம்பமாகின. பயிற்சி வழங்கலின் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சமரவீர மேலும் தெரிவிக்கையில், ‘ஆரம்பத்தில் பங்களாதேஷ் வீரர்களுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டேன். ஏனெனில், அங்கு அனேகர் புதியவர்கள். நான், அங்குள்ள நான்கைந்து வீரர்களுக்கு எதிராக விளையாடி இருக்கின்றேன்.
இங்கிருக்கும் வீரர்களின் திறமைகள் பற்றி நான் கவலைப்படவில்லை. நான்கைந்து மாதங்கள் சர்வதேச போட்டிகளில் விளையாட வீரர்களுக்கு பயிற்சி முக்கியமானது. எனவே, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு வீரர்களை தயார்ப்படுத்துவதற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கின்றேன்.
வீரர்களுக்கு வழங்கும் சுதந்திரம், முன்னணி நாடுகளுடன் விளையாடும் போது அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும்.
கடந்த 18 மாதங்களில் பங்களாதேஷ் அணியின் பெறுபேறு சிறப்பாக இருக்கிறது. பாகிஸ்தான், இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளை அவர்கள் தோற்கடித்திருக்கின்றனர். கடந்த உலகக் கிண்ணப்போட்டிகளின் போதும், வித்தியாசமான காலநிலையில் அவர்கள் நன்றாக விளையாடியிருக்கின்றனர்’- என்றார்.
Related posts:
|
|