ஷங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ்: கிண்ணத்தை வென்றனர் அன்டி முர்ரே,வொஸ்னியாக்கி !
Wednesday, October 19th, 2016
ஷங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் அன்டி முர்ரே, வொஸ்னியாக்கி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
ஷங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்தது. இதன் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான அன்டி முர்ரே, தரவரிசையில் 19-வது இடம் வகிக்கும் ராபர்ட்டோ பாடிஸ்டா அகுத்தை (ஸ்பெயின்) நேற்று எதிர்கொண்டார். 1 மணி 37 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் ஒலிம்பிக் சம்பியனான அன்டி முர்ரே 7-6 −(7-−1), 6-−1 என்ற நேர் செட் கணக்கில் அகுத்தை தோற்கடித்து பட்டத்தை சொந்தமாக்கினார்.
இந்த ஆண்டில் முர்ரே பெற்ற 6-வது பட்டம் இதுவாகும். ஷங்காய் மாஸ்டர்ஸ் போட்டியில் மகுடம் சூடுவது இது 3-வது (ஏற்கனவே 2010, 2011-ம் ஆண்டு) முறையாகும். 29 வயதான ஆன்டி முர்ரே, தரவரிசையில் முதலிடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறார். தற்போதைய முதனிலை வீரர் ஜோகோவிச்சை (செர்பியா) விட 915 புள்ளிகள் மட்டுமே முர்ரே பின்தங்கி இருக்கிறார். இந்த பருவகாலத்தில் மேலும் 3 தொடர்களில் விளையாட இருப்பதால் ஆண்டு இறுதிக்குள் முர்ரே முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
இதே போல் ஹொங்கொங் பகிரங்க டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கியும், பிரான்சின் கிரிஸ்டினா மிலாடெனோவிச்சும் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் வொஸ்னியாக்கி 6-−1, 6-−7, 6-−2 என்ற செட் கணக்கில் மிலாடெனோவிச்சை வீழ்த்தி கோப்பையை வசப்படுத்தினார்.
Related posts:
|
|