வெளியேறியது பெங்களூர் அணி: தகுதிச் சுற்றுக்குள் நுழைந்தது ஹைதராபாத்!

Saturday, November 7th, 2020

2020ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற வெளியேற்றச் சுற்றுப் போட்டியில் சன்றைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட்டுகளால் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.

இந்தப் போட்டி, அபுதாபி செய்க் ஷயெட் மைதானத்தில் நேற்று  மாலை நடைபெற்றது. இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சன்றைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் தேவ்டுத் படிக்கல் ஆகியோர் ஏமாற்றமளித்தனர்.

இந்நிலையில், பின்ச் மற்றும் டி வில்லியர்ஸின் நிதான ஆட்டத்துடன் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஏழ விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பாக, டி வில்லியர்ஸ் 56 ஓட்டங்களையும் பின்ச் 32 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் சன்றைசர்ஸ் அணி சார்பாக, ஹோல்டர் மூன்று விக்கெட்டுகளையும் நடராஜன் இரண்டு விக்கெட்டுகளையும் நதீம் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்நிலையில், 132 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இதன்படி ஆறு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

அணிசார்பாக, கேன் வில்லியம்சன் 50 ஓட்டங்களையும், மனிஷ் பாண்டே 23 ஓட்டங்களையும், ஜெசன் ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில், மொஹம்மட் சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும் அடம் ஷம்பா மற்றும் யுஸ்வேந்திர சாகல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக கேன் வில்லியம்சன் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் வரும் எட்டாம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் ஹைதராபாத் அணி டெல்லி கப்பிட்டல்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

இதேவேளை, தோல்வியுடன் பெங்களூர் அணி, தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றிபெறும் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: