வென்றது அவுஸ்திரேலியா!
Monday, August 22nd, 2016
பின்ச் மற்றும் ஸ்மித் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை துவம்சம் செய்துள்ளது அவுஸ்திரேலியா அணி.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் நடக்கிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன் படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. குஷால் பெரேரா 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். டில்ஷான் நிதானமாக ஆடி வந்த நிலையில் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
குஷால் மெண்டிஸ் (67) அரைசதம் கடந்து நம்பிக்கை அளித்தார். இதனையடுத்து வந்த மேத்யூஸ் (0), தனன்ஜெய டி சில்வா (2), சிறிவர்த்தனே (19) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
நிதானமாக ஆடிய துணைத்தலைவர் சந்திமால் அரைசதம் கடந்தார். திசர பெரேரா (21), தில்ருவான் பெரேரா (10) ஆகியோரும் நிலைக்கவில்லை. இதனால் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்கள் எடுத்தது.கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த துணை அணித்தலைவர் சந்திமால் 80 ஓட்டங்கள் எடுத்தார்.
அவுஸ்திரேலிய அணி சார்பில், ஜேம்ஸ் பால்கனர் 4 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.இதனையடுத்து 228 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி, துவக்கத்திலேயே வார்னரின் விக்கெட்டை இழந்தது. தொடர்ந்து களமிறங்கிய பின்ச் மற்றும் ஸ்மித் சூழ்நிலைக்கு ஏற்றவகையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
46 பந்துகளை சந்தித்த பின்ச் அபொன்சோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த வீரர்கள் எவரும் நிலைத்து நின்று ஆடவில்லை என்றபோதும் அணித்தலைவர் ஸ்மித் பொறுப்பை உணர்ந்து ஒருபக்கம் நிலைத்து நின்று அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.46.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு அவுஸ்திரேலியா அணி 228 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வெற்றி கண்டுள்ளது.10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜேம்ஸ் பால்கனர் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
Related posts:
|
|