வீரர்களுக்கு அறிவுரை கூறிய தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் !

உலகக்கோப்பை போட்டியில் அணி வெற்றி பெறுவதற்கு சூப்பர்மேன் செயல்கள் செய்வதை விட்டு வீரர்கள் தோல்வி எனும் அச்சத்தில் இருந்து மீண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி கேப்டன் பாப் டூ பிளீசிஸ் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பாப் டூ பிளீசிஸ் தனது அணி வீரர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
கடந்த 1992ஆம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. ஒவ்வொரு தொடரிலும் திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள், அதிரடியான துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தபோதிலும், அந்த அணியால் இதுவரை அரையிறுதியை தாண்டியதில்லை.
ஐ.சி.சி-யின் அனைத்து முக்கிய தொடர்களிலும், லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடும் தென் ஆப்பிரிக்க வீரர்கள், காலிறுதியிலோ அல்லது அரையிறுதியிலோ தாங்களாகவே தோல்வியடைந்து விடுவார்கள்.
தென் ஆப்பிரிக்க அணி இதுவரை 4 முறை அரையிறுதி வரையிலும், 2 முறை காலிறுதி வரையிலும், ஒருமுறை லீக் சுற்றோடும் தென் ஆப்பிரிக்கா வெளியேறி இருக்கிறது. இந்நிலையில், இந்த முறையும் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் அரையிறுதியோடு சென்று விடுவார்களா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து அந்த அணியின் கேப்டன் பாப் டூ பிளீசிஸ் கூறுகையில், ‘கடந்த உலகக்கோப்பைப் போட்டிகளில் நாங்கள் சூப்பர்மேன் விடயங்களை, செயல்களை செய்ய நினைத்தோம். அதாவது ஏதாவது சிறப்பாக, வித்தியாசமாக, வழக்கமாக செயல்படும் விதத்துக்கு மாறாக செய்ய நினைத்தோம்.
அதனால் என்னமோ, கடந்த காலங்களில் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல விதமாக உலகக்கோப்பையில் செயல்பட முடியவில்லை. கடந்த காலங்களில் உலகக்கோப்பையில் நாங்கள் சிறப்பாக விளையாடியபோதிலும், எங்களுக்கு கிடைக்க வேண்டியது, எப்போதும் சரியான நேரத்தில் கிடைக்கவில்லை.
ஏனென்றால், எங்கள் மீது ஏராளமான அழுத்தம் இருக்கிறது. ஆனால், இப்போது நாங்கள் கிரிக்கெட் மீது மட்டும் கவனம் செலுத்தி விளையாட இருக்கிறோம், கிரிக்கெட்டை ரசித்து விளையாட இருக்கிறோம். எங்கள் அணியின் வீரர்கள் எந்தவிதமான நெருக்கடிக்கும் ஆளாகாமல் சுதந்திரமாக விளையாட வேண்டும் என்பதற்கு காரணம் இருக்கிறது.
ஏனென்றால், தோற்றுவிடுவோம் எனும் அச்சம் இனியும் எங்களுக்கு தேவையில்லை. சூப்பர்மேன் விடயங்களை செய்யாமல் தவிர்த்து, தோல்வி எனும் பயத்தில் இருந்து வீரர்கள் மீண்டு வர வேண்டும். எங்களுடைய விளையாட்டை எவ்வாறு அடுத்த 2 மாதங்களுக்கு விளையாடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இங்கிலாந்தில் எங்கள் வெற்றி இருக்கிறது.
அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் முடிந்த அளவு சிறப்பாக செயல்படுவது அவசியம். ஒவ்வொரு வீரரும் தங்களின் பலம் என்பதை அறிந்து விளையாட வேண்டும். உலகக்கோப்பைப் போட்டிக்காக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாகவே மனரீதியாக நாங்கள் தயாராகும் பயிற்சியை தொடங்கிவிட்டோம்.
ஒரு கேப்டனாக கடந்த கால கேப்டன்கள் குறித்து நான் அதிகமாக பேசுகிறேன். ஆனால், கிரிக்கெட்டில் ஒரு துறையில் நாங்கள் வலிமையாக இருக்கிறோம் என்பதை நான் நம்புகிறேன். எனக்கு அழுத்தங்கள் என்ன என்பது புரியும், அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது புரியும்’ என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|