வில்லியம்சனின் சதத்தால் வெற்றிபெற்ற நியூஸிலாந்து!

Sunday, January 7th, 2018

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான் அணி 5 ஒருநாள் மற்றும் 3 ரீ20 போட்டிகளில் கொண்ட தொடரில் பங்குபெற்றவுள்ளது, இதனடிப்படையில் முதல் போட்டி இன்று வெலிங்டனில் நடைபெற்றது.

முதலாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி டக்வர்த்-லீவிஸ் விதியின்படி 61 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி அணித்தலைவர் வில்லியம்ஸனின் சதத்தின் உதவியுடன் 7 விக்கட்டுகளை இழந்து 315 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

வில்லியம்ஸன் 115 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, நிக்கோலஸ் 50 ஓட்டங்கள், முன்ரோ 58 ஓட்டங்கள் மற்றும் குப்டில் 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பாக்கிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் ஹசன் அலி அதிகப்படியாக 3 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு பலமான வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாட பாகிஸ்தான்  அணி முற்பட்டவேளை மழையின் குறுக்கீட்டால், டக்வர்த் லீவிஸ் முறைப்படி 30.1 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு 228 ஓட்டங்கள் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியிலக்கானது.

வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 30.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து, 166 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் சார்பில் பக்ஹர் ஷமான் ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, சவுத்தி 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்ஸன் தெரிவுசெய்யப்பட்டார்.

1-0 என்ற ரீதியில் தொடரில் நியூஸிலாந்து முன்ணணி வகிக்கும் அதேவேளை, இரண்டாவது போட்டி 9ம் திகதி நெல்சன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts: