வித்தியானந்தாவை வென்றது ஸ்ரான்லி!

Saturday, May 12th, 2018

யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்துக்கும் (ஸ்ரான்லி) புதுக்குடியிருப்பு வித்தியானந்தாக் கல்லூரிக்கும் இடையிலான 50 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட துடுப்பாட்டத்தில் வெற்றிபெற்றது கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்.

கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று இந்த ஆட்டம் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வித்தியானந்தாக் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரான்லிக் கல்லூரி அணி 186 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. அதிகபட்சமாக தர்சன் 44 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் வினுசாந் 4 இலக்குகளைக் கைப்பற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய வித்தியானந்தாக் கல்லூரி அணி 116 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்ததை அடுத்து 70 ஓட்டங்களால் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணி.

பந்துவீச்சில் அனுசன் 5 இலக்குகளையும் ஜிலக்சன் 2 இலக்குகளையும் தர்சன், கதிரவன், யதுசன் மூவரும் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

Related posts: