வஸிம் அக்ரமின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு வக்கார் யூனிஸ் கடும் கண்டனம்!

Friday, February 10th, 2017

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வஸிம் அக்ரம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தை மறுத்திருக்கும் அவரது சக வீரர் வக்கார் யூனிஸ், அது குறித்து தனது பலத்த கண்டனத்தையும் பதிவுசெய்திருக்கிறார்.

1999ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில், டெல்லி – கோட்லா மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரும் தற்போதைய இந்திய அணியின் பயிற்றுவிப்பாளருமான அனில் கும்ப்ளே 74 ஓட்டங்களுக்கு பத்து விக்கட்களை வீழ்த்தி சாதனை படைத்தார்.

இந்த நிகழ்வை நினைவு கூர்ந்திருக்கும் வஸிம் அக்ரம், சர்ச்சைக்குரிய மற்றொரு சம்பவத்தையும் அண்மையில் பதிவுசெய்திருந்தார்.

“கோட்லா போட்டியில் ஒன்பது விக்கட்களை கும்ப்ளே பறித்திருந்தார். அப்போது நான் களத்தில் ஆட்டமிழக்காமல் விளையாடிக்கொண்டிருந்தேன். பத்தாவது விக்கட்டுக்காக வக்கார் யூனிஸ் களமிறங்கினார். இருவரும் விளையாடிக்கொண்டிருந்தபோது என்னிடம் வந்த வக்கார், ‘பேசாமல் ரன்-அவுட் ஆகிவிடவா? அப்படிச் செய்துவிட்டால் கும்ப்ளேயால் பத்து விக்கட் சாதனையைப் படைக்க முடியாது போய்விடும்’ என்று கூறினார்.

“ஆனால், ஒருவரது சாதனையைத் தடுப்பதற்காக வேண்டுமென்றே ஆட்டமிழப்பது விளையாட்டு வீரருக்கு அழகல்ல. வேண்டுமானால் ஒன்று சொல்கிறேன். எனது விக்கட்டை கும்ப்ளேக்கு விட்டுத் தர மாட்டேன் என்று கூறினேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கும்ப்ளேயின் சுழலில், பத்தாவது விக்கட்டாக நானே ஆட்டமிழந்தேன்.”

இவ்வாறு வஸிம் அக்ரம் குறிப்பிட்டிருந்தார்.

இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த வக்கார் யூனிஸ், “வஸிம் எனது மூத்த சகோதரனைப் போன்றவர். திறமையான பந்துவீச்சாளர். ஆனால் ஏன் இப்படியொரு அபாண்டமான பொய்யை என் மீது சுமத்துகிறார் என்று புரியவில்லை. இப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லை. ஒருவேளை வயது அதிகமாகிவிட்டதால் ஞாபகமறதியும் அதிகமாகிவிட்டது என்று நினைக்கிறேன்” என ட்விட்டரில் பதிவுசெய்துள்ளார்.

இதேவேளை, கும்ப்ளே ஒன்பது விக்கட்களை வீழ்த்தியிருந்த வேளையில், அப்போதைய இந்திய அணித் தலைவர் அஸாருதீன், வேகப் பந்துவீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத்திடம் தனிப்பட்ட முறையில், கடைசி விக்கட்டையும் கும்ப்ளேயே வீழ்த்தட்டும்; நீங்கள் ஒப்புக்குப் பந்து வீசினால் போதும் என்று கூறியிருந்ததை பகிரங்கமாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், கும்ப்ளேயைத் தவிர மேலும் ஒரேயொரு வீரரே ஒரே இனிங்ஸில் பத்து விக்கட்களை வீழ்த்தியுள்ளார். அவர், இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஜிம் லேகர். 1956ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

7_Wasim_Waqar

Related posts: