வலுவான நிலையில் இந்தியா – முரளி விஜய், புஜாரா சிறப்பான ஆட்டம்!
Sunday, September 25th, 2016
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 318 ரன் குவித்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 262 ரன் எடுத்தது. வில்லியம்சன் 75 ரன்னும், டாம் லாதம் 58 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா 5 விக்கெட்டும், அஸ்வின் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
56 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து இருந்தது. முரளி விஜய் 64 ரன்னும், புஜாரா 50 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று 4வது நாள் ஆட்டம் நடந்தது. 215 ரன்கள் முன்னிலையில் கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடியது.
முரளி விஜயும், புஜாராவும், தொடர்ந்து விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடி வந்த இந்த ஜோடியை சான்ட்னெர் பிரித்தார். முரளி விஜய் 76 ரன் எடுத்து இருந்த போது அவரது பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 185 ஆக இருந்தது. 2வது விக்கெட்டுக்கு முரளி விஜய் – புஜாரா ஜோடி 133 ரன் எடுத்தது மிகவும் முக்கிய அம்சமாகும்.
அடுத்து கேப்டன் வீராட் கோலி களம் வந்தார். இந்த ஜோடியும் நிதானமாக விளையாடியது. இந்திய அணி 63வது ஓவரில் 200 ரன்னை தொட்டது.
நியூசிலாந்து சுழற்பந்து வீரர் மார்க் கிரேக் இந்த ஜோடியை பிரித்தார். வீராட் கோலி அவரது பந்தில் சோதியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 18 ரன்கள் எடுத்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 214 ஆக இருந்தது. அடுத்த சில நிமிடங்களில் அபாரமாக ஆடிக்கொண்டிருந்த புஜாராவும் ‘அவுட்’ஆனார். அவர் 152 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 78 ரன்கள் எடுத்தார். புஜாரா
விக்கெட்டை ஜோதி கைப்பற்றினார். 5வது விக்கெட்டுக்கு ரகானேவுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார்.
வலுவான நிலை மதிய உணவு இடை வேளையின் போது இந்தியா 81 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன் எடுத்து இருந்தது. ரகானே 21 ரன்ரன்னும், ரோகித் சர்மா 12 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
முதல் இன்னிங்சில் பெற்ற கூடுதல் ரன் மூலம் இந்தியா வலுவான நிலையில் இருக்கிறது. தேனீர் இடைவேளை வரை இந்திய அணி விளையாடி குறிப்பிட்ட இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
|
|