வடக்கு – கிழக்கை ஒன்றிணைத்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி யாழில்!

Tuesday, August 28th, 2018

யாழ் மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் மற்றும் பிரித்தானிய தமிழ் கிரிக்கெட் லீக் இணைத்து வடக்கு – கிழக்குப் பகுதியில் பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு துடுப்பாட்ட அணிகளுக்கிடையில் கிரிக்கெட் தாக்குதல் – 2018 இருபது – 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியை இரண்டாவது ஆண்டாக நடத்தவுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்தச் சுற்றுப்போட்டியின் போட்டிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி செப்டெம்பர் முதலாம் திகதி சனிக்கிழமை வரையில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, சென்.பற்றிக்ஸ் மத்திய கல்லூரி ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது.

இம்முறை சுற்றுப்போட்டியில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 10 அணிகள், மட்டக்களப்பு மாவட்ட 5 அணிகள், கிளிநொச்சி மாவட்ட 3 அணிகள், மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலிருந்து தலா 1 அணி என மொத்தம் 20 அணிகள் பங்குபற்றுகின்றன.

அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதற்சுற்று ஆட்டங்கள் லீக் முறையில்ட இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரு இடங்களைப் பெறும் அணிகள் காலிறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்படும். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி சென்.ஜோன்ஸ் கல்லூரி மற்றும் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானங்களில் நடைபெறவுள்ளது.

முதற்சுற்று ஆட்டங்கள் தொடக்கம் இறுதிப்போட்டி வரையில் மொத்தமாக 47 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் ஆட்டநாயகன் தெரிவு செய்யப்படுவார்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள துடுப்பாட்ட வீரர்களின் திறனை வளர்ச்சியடையச் செய்யவும் இந்த மாகாணங்களிலிருந்து தேசிய அணிக்கு வீரர்கள் உள்வாங்கப்படவேண்டும் என்ற நோக்குடன் பிரித்தானிய தமிழ் கிரிக்கெட் லீக் இந்தச் சுற்றுப்போட்டியை நடத்துகின்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சுற்றுப்போட்டியில் முதல் ஆண்டில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி சம்பியனாகியிருந்தது.

ஏ பிரிவில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி, கிளிநொச்சி மகாவித்தியாலயம், ஸ்கந்தவரோதயக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம் மற்றும் யாழ்;பபாணம் மத்திய கல்லூரி ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஏ பிரிவு அணிகளுக்கிடையிலான முதற்சுற்று ஆட்டங்கள் யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பி பிரிவில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி, கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மற்றும் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பிரிவு அணிகளுக்கிடையிலான முதற்சுற்று ஆட்டங்கள் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

சி பிரிவில் மட்டக்களப்பு சென்.மைக்கல் கல்லூரி, மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, மற்றும் சென்.பற்றிக்ஸ் கல்லூரி ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பிரிவு அணிகளுக்கிடையிலான முதற்சுற்று ஆட்டங்கள் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

டி பிரிவில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய கல்லூரி, கிளிநொச்சி இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, மட்டக்களப்பு களுதாவளை மகாவித்தியாலயம், சென்.ஜோன்ஸ் கல்லூரி ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பிரிவு அணிகளுக்கிடையிலான ஆட்டம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts: