வடக்கின் போரில் வென்றது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி!

IMG_8592 Sunday, March 11th, 2018

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான வடக்கின் போர் துடுப்பாட்டத் தொடரில், நடப்பு வருடத்தில் நடைபெற்ற 112ஆவது ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றது.

சென். ஜோன்­ஸின் முதல் இன்­னிங்ஸ்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மைதானத்தில் கடந்த வியாழக் கிழமை இந்த ஆட்டம் ஆரம்பமானது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 217 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்­தது. அதிகபட்சமாக செரோபன் 65 ஓட்டங்களையும், டெனுசன் 32 ஓட்டங்களையும், டினோசன் 28 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் விஜஸ்காந் 4 இலக்குகளையும், தசோபன் 3 இலக்குகளையும், சுஜன், மதுசன், துசாந்தன் மூவரும் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

பதிலுக்குக் களமிறங்கிய யாழ்ப்பாணம் மத்­திய கல்லூரி அணி சகல இலக்குகளையும் இழந்து 328 ஓட்டங்களைப் பெற்­றது. பந்துவீச்சில் கபில்ராஜ் 5 இலக்குகளையும், அபினேஸ் 2 இலக்குகளையும், சனுசன், ஜதுசன், சௌமியன் மூவரும் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினர். அதிகபட்சமாக ஜெயதர்சன் 77 ஓட்டங்களையும், ராஜ்கிளிங்டன் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும், மிதுசன் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.

சென். ஜோன்ஸின் இரண்டாவது இன்னிங்ஸ்

இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க வேண்டுமாயின் 111 ஓட்டங்களைப் பெறவேண்டும் என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி நேற்றுமுன்தின இரண்டாம் நாள் முடிவில் வெறும் 8 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை இழந்து தடுமாறியது.

நேற்றைய நாளின் ஆரம்பத்தில் சென். ஜோன்ஸ் தடுமாற வாய்ப்புக்கள் அதிகம் இருக்கவே செய்தன. அணி 31 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் சென். ஜோன்ஸின் ஐந்தாவது இலக்குச் சரிக்கப்பட்டது. ஜதுசன், கபில்ராஜ் இருவரும் அரைச்சதம் கடந்து அணியைப் பலப்படுத்தினர். வேறு எவரும் சிறப்பாகச் செயற்படவில்லை. முடிவில் 219 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது சென். ஜோன்ஸ். பந்துவீச்சில் சுஜன் 4 இலக்குகளையும், மது­சன் 3 இலக்குகளையும் கைப்பற்றினர்.

மத்தியின் இரண்டாவது இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றமையால் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கு 109 ஓட்டங்களே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்ப வீரர்களாக விஜஸ்காந் மற்றும் ஜெயதர்சன். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி இலகுவாக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி மிகச் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தியது.

ஜெயதர்சனை 3 ஓட்டங்களுடனும், இயலரசனை ஓட்டமெதையும் பெற விடாமலும் வெளியேற்றினார் கபில்ராஜ். நிசானை 3 ஓட்டங்களுடன் வெளியேற்றினார் சனுசன். விஜஸ்காந் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மத்திய வரிசையில் மதுசன் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தசோபன், ராஜ்கிளிங்டன் முறையே 3, 4 ஓட்டங்களுடன் வெளியேற்றப்பட 87 ஓட்டங்களுக்கு 7 இலக்குகளை இழந்தது மத்தி. 53 ஓட்டங்களுடன் மது­சனை வெளியேற்றினார் கபில்ராஜ். அவர் டிலிசியனை ஓட்டமெதையும் பெறவிடாது இருக்கைக்குத் திருப்பினார். 101 ஓட்டங்களுக்கு 9 இலக்குகளை இழந்தது யாழ்ப்பாணம் மத்தி.

8 ஓட்டங்களைப் பெற்றால் மத்திக்கு வெற்றி. ஓர் இலக்கைக் கைப்பற்றினால் சென். ஜோன்ஸூக்கு வெற்றியென்ற நிலை. மைதானமே பரபரப்பானது. சுயன், துசாந்தன் இருவரும் நிலைத்துநின்று ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தனர். ஓர் இலக்கால் வெற்றிபெற்றது யாழ்ப்பாணம் மத்தி. பந்துவீச்சில் கபில்ராஜ் 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.

விருதுகள்

ஆட்டநாயகனாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் மதுசன், சகலதுறை வீரராக சென். ஜோன்ஸின் யதுசன், சிறந்த துடுப்பாட்ட வீரராக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஜெயதர்சன், சிறந்த பந்துவீச்சாளராக சென். ஜோன்ஸ் கல்லூரியின் கபில்ராஜ், சிறந்த இலக்குக் காப்பாளராக சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் ஜோயல் பிரவீன், சிறந்த களத்தடுப்பாளராக டிலிசியன் ஆகியோர் தெரிவாகினர்.