வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டி20 : வெற்றி கண்டது தென்ஆபிரிக்கா!

Friday, October 27th, 2017

தென்ஆப்பிரிக்கா சென்றுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 2 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா அணி முழுமையாக கைப்பற்றியது.

தென்ஆப்பிரிக்கா – வங்காளதேசம் அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் உள்ள மாங்ஆங் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டீ காக்கும், அம்லாவும் களமிறங்கினர். அம்லா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து டி காக் உடன், டீவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்குவித்தது. அரைசதம் அடித்த டீ காக் 59 ரன்களில் ருபெல் பந்தில் அவுட் ஆனார். டீவில்லியர்ஸ் 49 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து களமிறங்கிய டுமினி 13 ரன்கள் எடுத்து ஷாகிப் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தென்ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. மில்லர் 25 ரன்களுடனும், பெஹார்தின் 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இம்ருல் கயீசும், சவுமிய சர்காரும் களமிறங்கினர். இம்ருல் கயீஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சவுமிய சர்கார் 47 ரன்களும், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரகிம் ஆகியோர் தலா 13 ரன்களும், சபிர் ரஹ்மான் 19 ரன்களும், மஹ்மதுல்லா 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது வங்காளதேச அணி 13.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து களமிறங்கியவர்களில் மொஹமத் சயிஃபுதின் 39 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ரன் எடுக்க தவறினர். வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தென்ஆப்ரிக்கா அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்ஆப்ரிக்கா அணியின் டேன் பாடர்சன், பியுரன் ஹென்ரிக்ஸ், ராபர்ட் ஃப்ரைலிங், அண்டில் பெலுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்களும், ஆரோன் பங்கிசோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தென்ஆப்ரிக்கா அணியின் டீவில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி 29-ம் தேதி நடைபெறுகிறது.

Related posts: