லஷ்மனுக்கு எப்படி ஆஸ்திரேலிய அணியோ அது மாதிரி எனக்கு மேற்கிந்தியத் தீவுகள் அஸ்வின்!

நடுவரிசையில் பேட்ஸ்மேனாக களமிறங்குவதே தனது இலக்காக இருந்ததாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 566 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் கேப்டன் விராட் கோலியுடன் இணைந்து, அஸ்வின் நிலைகொண்டு ஆடியதால், அணி நல்ல ஒரு ஸ்கோரை எட்ட முடிந்தது. விராட் 200 ரன்களையும் அஸ்வின் 113 ரன்களையும் அடித்தனர். டெஸ்ட் அரங்கில் அஸ்வின் அடித்த 3வது சதம் இதுவாகும்.
சதமடித்தது குறித்து அஸ்வின் கூறுகையில்,” டெஸ்ட் அரங்கில் முதல் 7 இடத்திற்குள் களமிறங்க வேண்டுமென்பது எனது கனவு. இலக்காகவும் கூட இருந்தது. இந்தப் போட்டியில் என் மீது நம்பிக்கை வைத்து பயிற்சியாளரும் கேப்டனும் என்னை 6வது இடத்தில் களமிறங்க அனுமதித்தனர். ‘குறைந்தது 200 பந்துகளை எதிர்கொண்டு சதமடிக்கலாம்’ என இந்த போட்டித் தொடங்குவதற்கு முன், துணை கேப்டன் அஜிங்கிய ரஹானே கருத்து வெளியிட்டிருந்தார். எனது இலக்கு 150 பந்துகளில் சதமடிப்பதாக இருந்தது. ஆனாலும் முடிந்தளவு பந்துகளை வீணடிக்காமல் ரன்களை சேகரிக்க முயற்சித்தேன்.
கேப்ரியல் சில பந்துகளை வெளியே வீசினார். அந்த பந்துகளை அடித்து விளையாட நான் எத்தனித்த போது, விராட் என்னிடம் வந்து, ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் இது போன்ற ஷாட்களை தவிர்த்தால் நல்லது’ என ஆலோசனை வழங்கினார் இதற்கு முன் கொல்கத்தாவில் நடந்த ஒரு போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம், 6 விக்கெட்டுக்கு 60 ரன்களை எடுத்திருந்த போது களமிறங்கினேன். அப்போதும் நான் சதமடித்தேன். வி.வி.எஸ் லக் ஷ்மணுக்கு எப்படி ஆஸ்திரேலிய அணியோ அது மாதிரி எனக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி. ”என்றார்
அஸ்வின் அடித்த 3வது டெஸ்ட் சதம் இது. இந்த மூன்று சதமுமே மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், ”மற்ற இரு பார்மட்களையும் விட டெஸ்ட் கிரிக்கெட்தான் மிகவும் முக்கியமானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் உங்களுக்கு நிச்சயம் ஒரு மனதிருப்தி கிடைக்கும். பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடும்போது, ஒரு கேப்டனாக அவர்கள் பாணியில் விளையாட அனுமதித்து விடுவேன். என்னால் செய்ய முடியாத விஷயங்களை அவர்கள் செய்தால் நான் தடுப்பதில்லை” என்றார்.
முன்னதாக இந்த போட்டியில் அஸ்வினை 6 வது விக்கெட்டாக, பரீட்சார்த்த முறையில்தான் பயிற்சியாளர் கும்ப்ளேவும் கேப்டன் விராட் கோலியும் களமிறக்கினர். அஸ்வின் சதமடித்து அசத்தியதால், தொடர்ந்து அவர் 6வது விக்கெட்டாக களமிறங்க வாய்ப்புள்ளது.
Related posts:
|
|