ராஜ்கோட் போட்டிக்கு நிதி ஒதுக்க வேண்டும் – கிரிக்கெட் சபை உச்ச நீதிமன்றில் மனு!

Wednesday, November 9th, 2016

லோதா கமிட்டி பரிந்துரைகளை ஏற்காததால் ராஜ்கோட் டெஸ்டுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் சபை உச்ச நீதிமன்றில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (பி.சி.சி.ஐ.) நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்யக்கோரி லோதா கமிட்டி பல்வேறு பரிந்துரைகளை தாக்கல் செய்தது. லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று கிரிக்கெட் சபைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

வயது, பதவி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளுக்கு கிரிக்கெட் சபை எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் லோதா குழு பரிந்துரையை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தியது. இதைத் தொடர்ந்து லோதா குழு உச்ச நீதிமன்றை அணுகியது.

இது தொடர்பாக பி.சி.சி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. லோதா குழுவின் பரிந்துரையை அமல்படுத்தாதவரை மாநில சங்கங்களுக்கு நிதி வழங்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் கிரிக்கெட் சபை உச்ச நீதிமன்றில் நேற்று அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியா- இங்கிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. இதற்கான நிதியை ஒதுக்க வேண்டும். லோதா குழு நிதியை ஒதுக்காவிட்டால் டெஸ்ட் போட்டியை இரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

கிரிக்கெட் சபையின் இந்த மனுவுக்கு லோதா கமிட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உச்ச நீதிமன்றின் உத்தரவை ஏற்காமல் கிரிக்கெட் சபை நீதிமன்றுக்கு அவமதிப்பு செயலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியது. இந்த மனு குறித்து உச்ச நீதிமன்றின் தலைமை நீதிபதியிடம் ஆலோசனை பெறப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். பிற்பகலில் இந்த மனு விசாரணைக்கு வருகிறது.இந்த விவகாரத்தால் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

91col145709172_4994339_08112016_ssk_cmy

Related posts: