ரபாடாவின் அசுர வேகத்தில் சொந்த மண்ணில் பணிந்தது ஆஸி!

Wednesday, November 9th, 2016

பேர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அவுஸ்திரேலியா அணியை தென்ஆபிரிக்கா அணி 177 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அவுஸ்திரேலியா – தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் தென்ஆபிரிக்கா 242 ஓட்டமும், அவுஸ்திரேலியா 244 ஓட்டமும் எடுத்தன. 2 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆபிரிக்கா டுமினி, எல்கர் ஆகியோரின் அபார சதத்தால் 8 விக்கெட் இழப்புக்கு 540 ஓட்டங்கள் குவித்து ஆடடத்தை இடைநிறுத்தியது. இதனால் அவுஸ்திரேலியாவுக்கு 539 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

2-வது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலியா 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. கவாஜா 58 ஓட்டமும், மிட்செல் மார்ஷ் 15 ஓட்டமும் களத்தில் இருந்தனர். அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு 370 ஓட்டங்கள் தேவைப்பட்டது,

5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. வெற்றிக்கு மேலும் 370 ஓட்டங்கள் தேவை, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் அவுஸ்திரேலியா தொடர்ந்து விளையாடியது. எஞ்சிய 6 விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலையில் தென்ஆபிரிக்கா பந்து வீச்சை தொடர்ந்தது.

ஒரு பக்கம் நம்பிக்கையுடன் உஸ்மான் கவாஜா விளையாட, மறுமுனையில் விளையாடிய மிட்செல் மார்ஷை 26 ஓட்டங்களில் வெளியேற்றினார் ரபாடா. அடுத்து விக்கெட் காப்பாளர் நெவில் களம் இறங்கினார்.

மறுமுனையில் விளையாடிய உஸ்மான் கவாஜா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டுமினி பந்தில் 97 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தது சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.கவாஜா விக்கெட் வீழ்ந்ததும் ஆஸ்திரேலியாவின் தோல்வி உறுதியானது. அடுத்து வந்த ஸ்டார்க்கை ரபாடா வீழ்த்தினார். இதன்மூலம் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி முத்திரை பதித்தார்.

அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க ஆஸ்திரேலியா 361 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டையும் இழந்தது. இதனால் தென்ஆபிரிக்கா 177 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நெவில் மட்டும் 60 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். தென்ஆபிரிக்கா அணி சார்பில் ரபாடா அதிகபட்சமாக 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

அந்த வெற்றியின் மூலம் பெர்த் மைதானத்தில் தென்ஆபிரிக்கா அணி ஹெட்ரிக்’ வெற்றியை ருசித்துள்ளது.மேலும், 3 டெஸ்ட் கொண்ட தொடரில் தென்ஆபிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்களும் வீழ்த்திய ரபாடா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

25col4674161128513_4991061_07112016_aff_cmy