மே. இந்திய தீவுகள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு!

Monday, October 1st, 2018

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒரு நாள், டி20 தொடர்களில் பங்கேற்கிறது. 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் அக்டோபர் 4-ஆம் திகதி தொடங்குகிறது.

இதற்கான அணியை தெரிவு செய்வதற்கு தேர்வாளர்கள் குழுக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் 5 உறுப்பினர்களில் சரண்தீப் சிங் துபையிலும், ஜதின் பராஞ்சிபே, ககன் கோடா ஆகியோர் விஜய் ஹசாரே போட்டிகளை பார்வையிட்டு வருவதாலும் பங்கேற்கவில்லை.

இதனால் தேர்வாளர்கள் குழுத் தலைவர் எம்எஸ்கே.பிரசாத், உறுப்பினர் தேவங் காந்தி ஆகியோர் சாதாரண முறையில் தில்லியில் அணித் தேர்வுக்கான பணிகள் குறித்து ஆலோசனை செய்தனர்.

இந்நிலையில், இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ சனிக்கிழமை அறிவித்துள்ளது. அதில், தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் மற்றும் விஜய் சேர்க்கப்படவில்லை. அதனால், தொடக்க வீரராக பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்குவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இஷாந்த் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா காயத்தில் இருந்து இன்னும் திரும்பாத காரணத்தினால் அவர்கள் தேர்வுக்கு கணக்கில் கொள்ளப்படவில்லை. மேலும் பணிச்சுமை காரணமாக புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி:

விராட் கோஹ்லி (அணித்தலைவர்), கேஎல் ராகுல், பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், சேத்தேஷ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே (துணைத் தலைவர்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர்

Related posts: