முதல் போட்டியில் இலங்கை தோல்வி: காரணத்தை கூறுகிறார் அணித்தலைவர் !

Monday, March 4th, 2019

முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்கா அணி இலங்கை அணியை 8 விக்கட்டுக்களால் வெற்றி கொண்டது

ஜொஹனஸ்பேக்கில் நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 47 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 231 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை சார்பில் துடுப்பாட்டத்தில் குசல் மென்டிஸ் 60 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

இந்தநிலையில், தமது வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய தென்னாப்பிரிக்கா அணி 38.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 232 ஒட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

தென்னாபிரிக்கா அணி சார்பில், பெப் டு பிளஸ்ஸிஸ் ஆட்டமிழக்காது 112 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார். அவரே போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

இந்தநிலையில், 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென்னாப்பிரிக்கா அணி 1க்கு பூச்சியம் என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

இதேவேளை, இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதனிடையே முக்கியமான தருணங்களில் இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிந்தமையே தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைவதற்கு காரணம் என அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

மைதானத்தில் வைத்து, உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனவே அடுத்த போட்டியில் வெற்றிப் பெறுவதற்கு, அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு தமது பொறுப்பை உணர்த்தி களமிறங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: