மீண்டும் எழுந்து நடப்பதை இந்த விளையாட்டு கற்றுத் தந்தது – யுவராஜ்சிங் உருக்கம்!
Tuesday, June 11th, 2019சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த இந்திய அணியின் அதிரடிவீரர் யுவராஜ்சிங், கிரிக்கெட் தனக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுத்ததாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரராக கலக்கியவர் யுவராஜ்சிங். கிரிக்கெட் களத்தில் போராடி அணிக்கு வெற்றியை தேடித்தரும் அவர், தனது வாழ்நாளில் புற்றுநோய்க்கு எதிராகவும் போராடி வெற்றி கண்டார். 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்தார்.
2002ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில், அணியில் நட்சத்திரவீரர்கள் ஆட்டமிழந்தபோது அதிரடியாக 69 ஓட்டங்கள் விளாசி, 326 ஓட்டங்கள் என்ற இலக்கை இந்தியஅணி எட்டுவதற்கு பெரும் பங்காற்றினார்.
அதன்பின்னர், 2011ஆம் ஆண்டு டோனி தலைமையிலான இந்தியஅணி உலகக்கோப்பையை வென்றபோது, அந்ததொடரில் 362 ஓட்டங்கள் குவித்த யுவராஜ்சிங் தொடர்நாயகன் விருதை வென்றார். ஆனால், அப்போதுதான் பேரிடியாய் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. யுவராஜ்சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை இதோடு முடிந்துவிட்டதாக பலரும் கருதிய நிலையில், அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தார் யுவராஜ்சிங்.
அத்துடன் கடுமையான பயிற்சிக்கு பின், 2013ஆம் ஆண்டு மீண்டும் கிரிக்கெட் களத்தில் குதித்தார். பழைய அதிரடி ஆட்டத்தை யுவராஜிடம் காணமுடியவில்லை. எனினும், அவரால் முடிந்தவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றார். இதற்கிடையில் மோசமான பார்ஃம் காரணமாக அவருக்கு வாய்ப்புகளும் சரியாக வழங்கப்படவில்லை.
கடைசியாக நடந்த ஐ.பி.எல் தொடரிலும் மும்பை அணிக்காக 4 போட்டிகளில் மட்டுமே யுவராஜுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ்சிங் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்கூறுகையில், ‘25 ஆண்டுகளுக்குப் பிறகு நான் கடந்து செல்லமுடிவெடுத்து இருக்கிறேன்.
கிரிக்கெட் எனக்கு வேண்டிய அனைத்தையும் அளித்தது. நான் இன்று இந்த இடத்தில் இருப்பதற்கான காரணமும் கிரிக்கெட்தான். நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி. இந்திய அணிக்காக 400 போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். நான் முதன் முதலாக கிரிக்கெட் விளையாடும்போது இதை நினைத்துக்கூட பார்க்கவில்லை.
கிரிக்கெட் எனக்கு வெறுப்பும், அன்பும் கலந்த விளையாட்டாக இருந்தது. கிரிக்கெட் எனக்கு என்னவாக இருந்தது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. இந்த விளையாட்டு எனக்கு போராடக் கற்றுக்கொடுத்தது. நான் வெற்றியடைந்ததைவிட அதிகமுறை தோல்வி அடைந்து இருக்கிறேன். எனினும் நான் விட்டுக்கொடுக்கவில்லை’என தெரிவித்துள்ளார்.
யுவராஜ்சிங் 304 ஒருநாள் போட்டிகளில் 8,701 ஓட்டங்களும், 14 சதங்கள் மற்றும் 52 அரைசதங்கள் விளாசியுள்ளார். அத்துடன் 111 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 40 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள யுவராஜ் 1900 ஓட்டங்களுடன், 3 சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் அடித்துள்ளார்.
Related posts:
|
|