மிரட்டிய நியூசிலாந்து அணி: இரண்டு வீரர்கள் சதம் விளாசியும் இன்னிங்ஸ் தோல்வியடைந்த வங்கதேசம்!

Monday, March 4th, 2019

ஹாமில்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

நியூசிலாந்து-வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடந்தது. முதலில் ஆடிய வங்கதேசம் 234 ஓட்டங்களில் ஆல்-அவுட் ஆனது. தமிம் இக்பால் 126 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 715 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 200 ஓட்டங்களும்(நாட்-அவுட்), டாம் லாதம் 161 ஓட்டங்களும், ஜீத் ராவல் 132 ஓட்டங்களும் விளாசினர்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம், நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான இன்று வங்கதேசம் ஆட்டத்தை தொடர்ந்தது.

சவுமியா சர்கார் மற்றும் மக்மதுல்லா இருவரும் நியூசிலாந்தின் பந்துவீச்சை விளாசி தள்ளினர். இந்த கூட்டணி நங்கூரம் போல் நின்று அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தியது. சவுமியா சர்கார் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார்.

மக்மதுல்லாவும் சதம் விளாசினார். இவர்களின் அபார ஆட்டத்தினால் வங்கதேசம் 300 ஓட்டங்களை கடந்தது. அணியின் ஸ்கோர் 361 ஆக இருந்தபோது சவுமியா சர்கார் 149 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். எனினும் கடைசி வரை போராடிய மக்மதுல்லா 9வது விக்கெட்டாக 146 ஓட்டங்களில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து, களமிறங்கிய ஹொசைனும் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனதால் வங்கதேச அணி 429 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது நியூசிலாந்து தரப்பில் டிரெண்ட் போட் 5 விக்கெட்டுகளும், டிம் சவுதி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி இன்னிங்சில் மற்றும் 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related posts: