மழையால் ரத்தானது இலங்கை – இங்கிலாந்து போட்டி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 248 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
பிரிஸ்டோலில் நடந்து வரும் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதனையடுத்து இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன் படி தொடக்க வீரர்களாக குஷால் பெரேரா, குணத்திலக களமிறங்கினர்.
குஷால் பெரேரா (9), குணத்திலக (1) இருவரும் ஒற்றை ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இதனால் 32 ஓட்டங்களுக்கே அந்த அணி 2 விக்கெட்டை இழந்து திணறியது.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த குஷால் மெண்டிஸ், தினேஷ் சந்திமால் நிதானமாக ஆடி ஓட்டங்கள் சேர்ப்பில் ஈடுபட்டனர். இதனால் இருவரும் அரைசதம் கடந்தனர். குஷால் மெண்டிஸ் 53 ஓட்டங்களும், தினேஷ் சந்திமால் 62 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அணித்தலைவர் மேத்யூஸ் (56) தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார்.
அதிரடி ஆட்டக்காரர் பிரசன்னா (2) நிலைக்கவில்லை. உபுல் தரங்கா (40) கடைசி நேரத்தில் அதிரடி காட்டி ஓட்டங்கள் சேர்த்தார். தசன் ஷனக (2), மஹரூஃப் (9) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 50 ஓவரில் இலங்கை 9 விக்கெட்டுக்கு 248 ஓட்டங்கள் சேர்த்தது. சுரங்க லக்மல் (3), நுவன் பிரதீப் (2) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இங்கிலாந்து அணி சார்பில், வோல்ஸ், பிளன்கெட் தலா 3 விக்கெட்டுகளும், டேவிட் வில்லி, ஜோர்டன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
249 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி துடுப்படுத்தாட களம் இறங்கியது தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 16 ஓட்டங்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்ததால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.
5 போட்டி கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 4–வது ஒரு நாள் போட்டி 29 ஆம் திகதி நடக்கிறது.
Related posts:
|
|