மத்தியூஸ் மெண்டிஸ் அபாரம்: இலங்கை – நியூசிலாந்து டெஸ்ட் சமனிலை!

Wednesday, December 19th, 2018

நியூசிலாந்து மற்றும் சுற்றுலா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, மழையின் இடையூறு மற்றும் அஞ்செலோ மதிவ்ஸ், குசல் மெண்டிஸ் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களின் மூலமாக சமனிலையில் முடிவுக்கு வந்துள்ளது.

போட்டியின் ஐந்தாவது நாளான இன்று (19) ஆரம்பத்திலிருந்து மழை குறுக்கிட்டிருந்தது. சுமார் 90 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பித்த இந்தப் போட்டியில், 259 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலங்கை அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. நேற்றைய தினத்தில் விக்கெட்டினை நியூசிலாந்து அணிக்கு விட்டுக்கொடுக்காமல் விளையாடிய மதிவ்ஸ் மற்றும் மெண்டிஸ் இன்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மதிவ்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, குசல் மெண்டிஸ் வேகமாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினார். எனினும் இன்றைய தினம் 13 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்ட நிலையில் போட்டியில் மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டதுடன், தொடர்ந்து மழைக் குறுக்கிட்டு வந்ததால், நடுவர்கள் அணித் தலைவர்களுடன் கலந்துரையாடி போட்டியை வெற்றித் தோல்வியின்றி முடிவு செய்வதாக தீர்மானித்தனர்.

இதன்படி ஆட்டம் நிறைவுசெய்யப்படும் போது, இலங்கை அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 287 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதில் குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 140 ஓட்டங்களையும், அஞ்சலோ மதிவ்ஸ் ஆட்டமிழக்காமல் 120 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் டீம் சௌதி 2 விக்கெட்டுகளையும், ட்ரெண்ட் போல்ட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.

முன்பதாக முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 282 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. இதில் மதிவ்ஸ் 83 ஓட்டங்கள், டிக்வெல்ல 80* ஓட்டங்கள் மற்றும் திமுத் கருணாரத்ன 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில் டீம் சௌதி 6 விக்கெட்டுகளையும், நெயில் வெங்கர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸில் ஆடிய நியூசிலாந்து அணி, டொம் லேத்தமின் அபார இரட்டைச் சதம் அடங்கலாக 578 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. டொம் லேத்தம் 264* ஓட்டங்களையும், கேன் வில்லியம்ஸன் 91 ஓட்டங்களையும் பெற்றதுடன், பி.ஜே.வெட்லிங் மற்றும் நிக்கோலஸ் ஆகியோர் தலா 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தனர். இலங்கை அணியின் பந்து வீச்சில் லஹிரு குமார 4 விக்கெட்டுகளையும், தனன்ஜய டி சில்வா மற்றும் டில்ருவான் பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பகிர்ந்தனர்.

இதன்படி, நியூசிலாந்து மற்றும் சுற்றுலா இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமனிலையில் முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக இரட்டைச் சதம் விளாசிய டொம் லேத்தம் தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை, இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ம் திகதி கிரிஸ்ட்ச்சேர்ச்சில் ஆரம்பமாகவுள்ளது.

Related posts: