மதுசன் அபாரப் பந்துவீச்சு  – வடமாகாண அணி வெற்றி!

Friday, June 22nd, 2018

யாழ் மத்திய கல்லூரி வீரன் செல்வராசா மதுசனின் சகலதுறை ஆட்டத்தால் வடமாகாண அணிக்கு இலகு வெற்றி.

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் 19 வயது மாகாண அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

தென் மாகாணம், மத்திய மாகாணம், மேல் மாகாணம் (தெற்கு), மேல் மாகாணம் (மத்தி), மேல் மாகாணம் (வடக்கு), வட மாகாணம், கிழக்கு மாகாணம், வட மேல் மாகாணம், ஊவா மாகாணம், வடமத்திய மாகாணம் என 10 அணிகள் இந்தச் சுற்றுப்போட்டியில் பங்கேற்கின்றன.

மேற்படி சுற்றுப்போட்டியின் போட்டியொன்று பி.சரவணமுத்து மைதானத்தில் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்றது. இதில் வடமாகாண அணியை எதிர்த்து வடமேல் மாகாண அணி மோதியது.

முதலில் வடமாகாண அணி துடுப்பெடுத்தாடிய போது மழை குறுக்கிட்டமை காரணமாக போட்டி 25 ஓவர்களாக குறைக்கப்பட்டது. வடக்கு மாகாண அணி 25 ஓவர்களில் 108 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் யாழ் மத்திய கல்லூரி வீரர் செல்வராசா மதுசன் 34 ஓட்டங்களையும் என்.சௌமியன் 17 ஓட்டங்களையும் எம்.பானுஜன் 14 ஓட்டங்களையும் மொனிக் நிதுசன் 12 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். சிகான் சில்வா, சிதும் அகலங்க தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

டக்வேர்த் லூயிஸ் முறைப்படி வடமேல் மாகாண அணிக்கு வெற்றியிலக்காக 121 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. அதற்கிணங்க துடுப்பெடுத்தாடிய வடமேல் மாகாண அணி, மதுசனின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 16.3 ஓவர்களில் 72 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. டக்வேர்த் லூயிஸ் முறைப்படி வடமாகாண அணி 49 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

நிபுன் தனஞ்சய 22, விடத் பற்றிப்பொல 12 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

செல்வராசா மதுசன் 18 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் எம்.அபிநாஸ் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Related posts: