பெடரர் 40 வயதுவரை விளையாடுவாரா !

Wednesday, July 19th, 2017

விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன்ஷிப்ஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டம் வென்றுள்ள சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், 40 வயதுவரை விளையாடக் கூடிய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

35 வயதான பெடரர், விம்பிள்டன் இறுதிப் போட்டியில், மரின் சிலிச்சை எதிர்கொண்டு, 6-3, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

இது, விம்பிள்டனில் 8 பட்டங்கள் வென்ற முதலாவது ஆண் என்ற சாதனையைப் படைக்க அவருக்கு வாய்ப்பை வழங்கியதோடு, அவரது 19ஆவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தையும் பெற்றுக் கொடுத்தது.

அவரது 36ஆவது பிறந்தநாளுக்கு, இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், தனது வெற்றிக்குப் பின்னர் கருத்துத் தெரிவித்த பெடரர், 40 வயதாகும் போது கூட, தன்னால் விம்பிள்டனில் விளையாட முடியுமெனத் தெரிவித்தார். தனது உடல்நிலையும் ஏனைய விடயங்களும் ஒத்துழைத்தால், அது சாத்தியமே என அவர் குறிப்பிட்டார்.

அதிக காலம் விளையாடும் அவரது ஆர்வம், அவரது அண்மைக்காலத் திட்டங்களால் சாத்தியப்படும் வாய்ப்புமுள்ளது.

கடந்தாண்டு விம்பிள்டனில், அரையிறுதிப் போட்டியில் வைத்துத் தோல்வியடைந்த அவர், அவரது முழங்கால் உபாதை குணமடைவதற்காக, அந்தாண்டில் போட்டி எதிலும் பங்குபற்றவில்லை. அதன் விளைவாக, தரப்படுத்தலில் 17ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டார். 2000ஆம் ஆண்டின் பின்னர் அவரது குறைவான தரப்படுத்தல் நிலையாக அது அமைந்தது.

அதன் பின்னர், அவுஸ்திரேலியப் பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாடிய பெடரர், அதில் சம்பியனானார். ஆனால், பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில் பங்குபற்றுவதிலிருந்து அவர் விலகினார். அதன் பின்னர் விம்பிள்டனில் பங்குபற்றி, சம்பியன் பட்டத்தை அவர் வென்றுள்ளார்.

இந்நிலையிலேயே, 40 வயதுவரை விளையாடும் தனது ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். விம்பிள்டன் வென்ற பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த பெடரர், “என்ன நடக்குமென எமக்குத் தெரியாது. இது என்னுடைய கடைசிப் போட்டியாக இருக்காது என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார். எனவே, அவர் ஓய்வுபெறுவாரா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.இந்தப் பின்னணியிலேயே, 40 வயதுவரை விளையாட எதிர்பார்ப்பதாகவும், அடுத்தாண்டு, அனேகமாக நிச்சயமாக விளையாடுவார் எனவும், பெடரர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: