பெங்களூரு அணி அபார வெற்றி !
Wednesday, April 13th, 2016ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 227 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.
9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் லயன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்வெளியூர் அடிப்படையில் இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 4-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின. ஐதராபாத் அணியில் கனே வில்லியம்சன் சேர்க்கப்படவில்லை. அறிமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் (வங்காளதேசத்தை சேர்ந்தவர்) இடம் பெற்றார்.
நாணயச் சுழற்சியில் வென்ற ஐதராபாத் தலைவர் வார்னர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி கிறிஸ் கெய்லும், விராட் கோலியும் பெங்களூரு அணியின் இன்னிங்சை தொடங்கினர். ‘அதிரடி மன்னன்’ கிறிஸ் கெய்ல் ஒரு ரன்னில் ஏமாற்றினார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் லெக்-சைடில் வீசிய பந்து கெய்லின் தொடையில் உரசிக்கொண்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. அடுத்து டிவில்லியர்ஸ் நுழைந்தார்.
முதல் 3 ஓவர்களில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டுக்கு 12 ரன்கள் எடுத்திருந்தது அதுவரை மட்டுமே ஐதராபாத்துக்கு திருப்தி அளித்திருக்கும். 4-வது ஓவரில் நெஹராவின் பந்து வீச்சில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் டிவில்லியர்ஸ் ரன்வேட்டையை ஆரம்பித்து வைத்தார். அதன் பிறகு கோலியும் ஐதராபாத் பந்து வீச்சை துவம்சம் செய்ய, ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. இவர்களை கட்டுப்படுத்த வழிதெரியாமல் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் விழிபிதுங்கினர். சிக்சர் மழையால் பெங்களூரு ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் திக்குமுக்காடி போயினர். 11.1 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. இருவரும் அரைசதங்களை கடந்தனர்.
அணியின் ஸ்கோர் 163 ரன்களாக உயர்ந்த போது விராட் கோலி 75 ரன்களில் (51 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சில் ‘கிளீன் போல்டு’ ஆனார். கோலியும், டிவில்லியர்சும் 2-வது விக்கெட்டுக்கு 157 ரன்கள் திரட்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அடுத்து பெங்களூரு அணிக்காக முதல்முறையாக அடியெடுத்து வைத்த ஷேன் வாட்சன், சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மாவின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் பறக்க விட்டு அட்டகாசப்படுத்தினார். மறுமுனையில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிவில்லியர்ஸ் 82 ரன்களில் (7 பவுண்டரி, 6 சிக்சர்), முஸ்தாபிஜூர் ரகுமானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.. அதே ஓவரில் வாட்சனும் 19 ரன்களில் (8 பந்து, 3 சிக்சர்) வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் இளம் வீரர் சர்ப்ராஸ் கானும் பிரமாதப்படுத்தினார். புவனேஷ்வர்குமார் வீசிய 19-வது ஓவரில் 4 பவுண்டரியும், ஒரு சிக்சரும் ஓட விட்டார். அந்த ஓவரிலேயே பெங்களூரு அணி, இந்த சீசனில் 200 ரன்களை கடந்த முதல் அணி என்ற சிறப்பை பெற்றது.
ஆடுகளம் முழுக்க முழுக்க துடுப்பாட்டத்தக்கு சொர்க்கமாக திகழ்ந்த போதிலும், அதிலும் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே பவுலர் முஸ்தாபிஜூர் ரகுமான் தான். சாதுர்யமாக பந்து வீசிய அவர் தனது முதல் 3 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். ஆனால் அவரது பந்தில் ஜாம்பவான்கள் தடுமாறிய நிலையில், அவரது கடைசி ஓவரில் 18 வயதான ‘இளம் புயல்’ சர்ப்ராஸ்கான் சிக்சர், பவுண்டரி விளாசி கலங்கடித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது. சர்ப்ராஸ் கான் 35 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் முஸ்தாபிஜூர்ரகுமான், புவனேஷ்வர்குமார் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணியில் டேவிட் வார்னர் சிறிது நேரம் வேடிக்கை காட்டினார். அவர் 58 ரன்களில் (25 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) வாட்சனின் ‘பவுன்சர்’ பந்து வீச்சில் வீழ்ந்ததும் அந்த அணியின் நம்பிக்கையும் தகர்ந்து போனது. முன்னணி வீரர்கள் ஷிகர் தவான் 8 ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 19 ரன்னிலும், ஆஷிஷ் ரெட்டி 32 ரன்னிலும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தனர். 20 ஓவர்களில் ஐதராபாத் அணியால் 6 விக்கெட்டுக்கு 182 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
Related posts:
|
|