புனே அயியின் தலைவர் பதவியிலிருந்து தோனி நீக்கம்!
Monday, February 20th, 2017
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் ரைஸிங் புனே சூப்பர் ஜயண்ட்ஸ் அணியின் தலைவர் பதவியிலிருந்து எம்.எஸ்.தோனி நீக்கப்பட்டுள்ளார். அந்த இடத்திற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக புணே அணியின் உரிமையாளர் சஞ்ஜீவ் கோயங்கா கூறியதாவது:
கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகவில்லை. வரும் சீசனில் எங்கள் அணியின் கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித்தை நியமித்துள்ளோம். வெளிப்படையாக சொன்னால், கடந்த சீசனில் எங்கள் அணி சிறப்பாக செயல்படவில்லை. அதனால் 10-ஆவது சீசனுக்கு எங்கள் அணியை இளம் வீரர் ஒருவர் வழி நடத்த வேண்டும் என்று விரும்பினோம். தலைசிறந்த கேப்டன் மற்றும் தலைசிறந்த மனிதரான தோனி மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர், எங்கள் அணிக்காக தொடர்ந்து விளையாடுவார். அணியின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவுகளுக்கு தோனியும் ஆதரவாக இருக்கிறார் என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணியின் ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டியின் கேப்டன் பதவியை ராஜிநாமா செய்தார். அதேநேரத்தில் ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்போது அந்த கேப்டன் பதவியையும் அவர் இழந்துள்ளார். 2008-இல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்டது முதல் 2015 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் தோனி. அவருடைய தலைமையிலான சென்னை அணி அனைத்து போட்டிகளிலும் அரையிறுதிக்கு முன்னேறியது. 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றது. இதுதவிர சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியிலும் அவர் சென்னை அணிக்கு தலைமை வகித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து புணே அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார் தோனி. ஆனால் அந்தப் பதவி ஓர் ஆண்டிலேயே முடிவுக்கு வந்துள்ளது. எனினும் அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாடுகிறபோது அதன் கேப்டனாக தோனி நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. புணே அணி, கடந்த சீசனில் 7-ஆவது இடத்தைப் பிடித்தது. கெவின் பீட்டர்சன், டூபிளெஸ்ஸிஸ், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலகியதும் கடந்த சீசனில் புணே அணியின் மோசமான தோல்விக்கு ஒரு காரணமாகும்.
Related posts:
|
|