பிலிப் ஹியூஸின் மரணத்தை மீண்டும் நினைவூட்டிய சம்பவம்!

Monday, March 5th, 2018

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட்டை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.  2014-ம் ஆண்டு நடந்த போட்டி ஒன்றில் பிலிப் ஹியூஸ் என்ற வீரர், இவர் வீசிய பந்து கழுத்தில் தாக்கிதான் உயிரை விட்டார்.

இந்தச் சம்பவத்துக்காக அப்போது அதிகமாக வருத்தப்பட்ட அப்போட், இதையடுத்து பந்துவீச்சின் வேகத்தை குறைத்து வீசி வந்தார்.

இப்போது மீண்டும் பழைய ஃபாமுக்கு வந்துவிட்டார்.

அந்த சம்பவத்தைப் போல இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதுவும் அப்போட் பந்துவீச்சிலேயே.

அவுஸ்திரேலியாவில் ‘ஷெபீல்டு ஷீல்டு’கோப்பைக்கான முதல் தரப் போட்டி நடந்துவருகிறது.  இதில் நியூ சவுத் வேல்ஸ் அணியும் விக்டோரியா அணியும் மோதின.

சவுத் வேல்ஸ் அணி சார்பில், வேகப்பந்து வீச்சாளர் அப்போட் பந்துவீசினார். அவர் வீசிய பவுன்சர், இளம் துடுப்பாட்ட வீரர் 20 வயதான புகோவ்ஸ்கியின் ஹெல்மெட்டில் வேகமாகத் தாக்கியது.

இதில் நிலைகுலைந்த புகோவ்ஸ்கி, சரிந்து விழுந்தார். உடனடியாக மற்ற வீரர்கள் மற்றும் நடுவர்கள் வந்து அவரை தூக்க முயன்றனர்.  பிசியோதெரபிஸ்ட் வரவழைக்கப்பட்டார். அவர் வந்து சிகிச்சை அளித்தார்.

புகோவ்ஸ்கி சகஜநிலைக்கு வர அதிக நேரமானது. பின்னர் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

அவரால் நடக்க முடியவில்லை. கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. இந்தச் சம்பவத்தால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அவர் விரைவில் குணமடைய கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.

Related posts: