பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஸ்வெரேவ், ஸ்டீபன்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஸ்வெரேவ், ஸ்டீபன்ஸ் ஆகியோர் முதல்முறையாக கால் இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரையில் நடக்கும் இந்த போட்டியில் நேற்று 4௲வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 3௲வது இடம் வகிக்கும் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ரஷியாவின் கரென் காச்சனோவுடன் மோதினார். முந்தைய 2 சுற்றுகளை போலவே இந்த முறையும் ஸ்வெரேவ் 5 செட் வரை போராட வேண்டி இருந்தது. 3 மணி 29 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 4-6, 7-6 (4), 2-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் காச்சனோவை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் ஸ்வெரேவ் கால்இறுதிக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும். அத்துடன் 2009-ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபனில் கால்இறுதியை எட்டிய இளம் வீரர் என்ற சிறப்பையும் 21 வயதான ஸ்வெரேவ் பெற்றார்.
ஸ்வெரேவ் கால்இறுதி சுற்றில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம்மை எதிர்கொள்கிறார். முன்னதாக டொமினிக் திம் 4௲வது சுற்றில் தன்னை சந்தித்த ஜப்பான் வீரர் நிஷிகோரியை 6-2, 6-0, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் விரட்டியடித்தார்.
ஸ்டீபன்ஸ் அபாரம்
பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் தன்னை எதிர்த்த மிஹெலா புஜார்னெஸ்குவை (ருமேனியா) 6-1, 6-4 என்ற நேர் செட்டில் வீழ்த்தி பிரெஞ்ச் ஓபனில் முதல் முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியனான ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-2, 6-0 என்ற நேர் செட்டில் அனெட் கோன்டாவெய்ட்டை (எஸ்தோனியா) பந்தாடியதுடன் கால்இறுதிக்கும் முன்னேறினார்.
7 வது முறையாக பிரெஞ்ச் ஓபனில் ஆடும் ஸ்டீபன்ஸ் 4௲வது சுற்று தடையை வெற்றிகரமாக கடந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இன்னொரு ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை யுலியா புதின்ட்சொவா 6-4, 6-3 என்ற நேர் செட்டில் ஸ்டிரிகோவாவை (செக்குடியரசு) வெளியேற்றினார்.
Related posts:
|
|