பாகிஸ்தான் வீச்சாளர் மோசமான சாதனை!

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஓல்டு டிராஃப்போர்டில் நடபெற்று வருகிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
3-வது நபராக களம் இறங்கிய ஜோ ரூட் அபாரமாக விளையாடி 254 ரன்கள் குவித்தார்.ஜோரூட் இரட்டை சதம் அடித்து சாதனைப் படைத்ததுபோல் பாகிஸ்தான் பந்து வீச்சாளர் யாசீர் ஷா 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையைப் படைத்துள்ளார்.
முதல் இன்னிங்சில் யாசீர் ஷா 54 ஓவர்கள் வீசி 6 மெய்டன் ஓவர்களுடன் 213 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 1 விக்கெட் மட்டுமே கைப்பற்றியுள்ளார். ஓல்டு டிராஃப்போர்டு மைதானத்தில் இதற்கு முன் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் பில் ஓ’ரெய்லி 189 ரன்கள் விட்டுக்கொடுத்ததே ஒரு பந்து வீச்சாளர் விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.
இதை யாசீர் ஷா மிஞ்சிவிட்டார். அதேவேளையில் இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் வீரர் இதற்கு முன் 192 ரன்கள் விட்டுக்கொடுத்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது 213 ரன்கள் விட்டுக்கொடுத்ததன் மூலம் யாசிர் ஷா பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தவர் என்ற மோசமான சாதனையை பெற்றுள்ளார்.
முந்தைய போட்டியில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்திய பந்து வீச்சாளர் அடுத்த போட்டியில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த மோசமான சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன் ஜிம்பாப்வே பந்து வீச்சாளர் ராய் பிரைஸ் 199 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார். தற்போது 213 ரன்கள் மூலம் அதை முறியடித்துள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் யாசீர் ஷா 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வரிசையில் யாசீர் ஷா 4-வது இடத்தில் உள்ளார். பாஸல் மெஹ்மூத் ஒரு டெஸ்டில் முதல் இன்னிங்சில் 259, 247 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார்.அதன்பின் சக்லைன் முஸ்டாக் 237 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார். தற்போது யாசீர் ஷா 213 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்
Related posts:
|
|