பழிதீர்த்தது அவுஸ்திரேலியா: தொடரை இழந்தது இலங்கை!

Thursday, September 1st, 2016

இலங்கை அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டி தம்புள்ளையில் நடந்தது. குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க வீரர்களாக தனன்ஜெய டி சில்வா, பெர்னாண்டோ ஆகியோர் களமிறங்கினார்கள். பெர்னாண்டோ டக்- அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதைத் தொடர்ந்து வந்த குஷால் மெண்டிஸ் (1), சந்திமால் (5) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அணித்தலைவர் மேத்யூஸ் (40) சிறப்பாக விளையாடி வந்த நிலையில், பந்து தலையில் தாக்கி வெளியேறினார். மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த தனன்ஜெய டி சில்வா (76) அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வந்தவர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் இலங்கை அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை எடுத்தது. அவுஸ்திரேலியா அணி சார்பில் ஜான் ஹஸ்டிங்ஸ் 45 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பின்னர் 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர் வார்னர் (19) நிலைக்கவில்லை.மற்றொரு தொடக்க வீரரான ஆரோன் பின்ச் (55) 19 பந்தில் அரைசதம் அடித்தார். கவாஜா டக்- அவுட் ஆனார்.

டிராவிஸ் 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, பெய்லி நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். இதனால் அவுஸ்திரேலியா 31 ஓவரிலே 4 விக்கெட் மட்டும் இழந்து 217 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜார்ஜ் பெய்லி 85 பந்தில் 90 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை அவுஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Related posts: