பங்களாதேஷுக்கெதிராக ஆப்கானுக்கு வெற்றி!

Thursday, September 29th, 2016

பங்களாதேஷ் அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில், மொஹமட் நபியின் அசத்தலான சகலதுறைப் பெறுபேறுகளின் உதவியோடு, ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி கிடைத்தது.

மிர்பூரில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பங்களாதேஷ் அணி, 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஒரு கட்டத்தில் 24.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, பின்னர் 33.6 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களுடன் தடுமாறியது. எனினும், மொஷாதிக் ஹொஸைனின் உதவியுடன், 200 ஓட்டங்களை அவ்வணி கடந்தது.

துடுப்பாட்டத்தில் மொஸடெக் ஹொஸைன் ஆட்டமிழக்காமல் 45 (45), முஸ்பிகூர் ரஹீம் 38 (51) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் றஷீட் கான் 3, மிர்வைஸ் அஷ்ரப் 2, மொஹமட் நபி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதில் நபி, 10 ஓவர்களில் வெறுமனே 16 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்தார்.

209 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, வெற்றிபெற்றது. 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அவ்வணி, பின்னர் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்டாலும், நபியின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து, 44.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களுடன் தடுமாறியது. பின்னர், இறுதி 3 பந்துகளில் 2 விக்கெட்டுகள் கைவசமிருக்க 4 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், 4ஆவது பந்தை, தவ்லட் ஸட்ரன், 4 ஓட்டங்களுக்கு அடித்து, வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் அஸ்கர் ஸ்டனிக்ஸாய் 57 (95), மொஹமட் நபி 49 (61), மொஹமட் ஷஷாத் 35 (35) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஷகிப் அல் ஹஸன் 2, மொசஸெக் ஹொஸைன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.இப்போட்டியின் நாயகனாக, மொஹமட் நபி தெரிவானார்.

afghan_2767898f

Related posts: