நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர் ஒலிம்பிக்கில்!

Wednesday, August 3rd, 2016

 

நேபாள நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த 13 வயது சிறுமியான கௌரிகா சிங் ரியோ ஒலிம்பிக்கில்  நீச்சல் போட்டியில் பங்குபெறவுள்ளார். அத்துடன், ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் இள வயது போட்டியாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

எதிர்வரும் 5ஆம் திகதி ரியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் ரியோ நகரை நோக்கி வீர வீராங்கனைகள் படையெடுத்துள்ளனர். இந்நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களில் மிக இளவயது போட்டியாளர் என்ற பெருமையை, நேபாள நீச்சல் வீராங்கனை கௌரிகா சிங் பெற்றுள்ளார்.

13 வயதும் 255 நாட்களான கௌரிகா சிங் நேபாளத் தலைநகர், காத்மண்டுவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவராவார். கௌரிகா சிங் இரண்டு வயது குழந்தையாக இருந்த போதே அவருடைய பெற்றோர்கள் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காத்மண்டுவில் இடம்பெற்ற தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்க கௌரிகா சிங் நேபாளத்திற்கு வருகை தந்திருந்தார். இதன் போது தாயுடன் தங்கியிருந்த கௌரிகா சிங் காத்மண்டு நிலநடுக்கத்தை எதிர்நோக்கியிருந்தார். எனினும், கௌரிகா சிங் இதில் உயிர் பிழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது