நியூசிலாந்து–இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை
Tuesday, March 29th, 201620 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர் 10’ சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன.
இதன் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
இன்று ஓய்வு நாளாகும். முதல் அரை இறுதி ஆட்டம் டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நாளை (30) இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் நியூசிலாந்து– இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் அரை இறுதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டிக்கு முன்னேற இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் கடுமையாக போராடும்.
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வென்று ‘குரூப் 2’ பிரிவில் முதலிடத்தை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றது. தோல்வியை சந்திக்காத அந்த அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்துடன் உள்ளது.
2–வது முறையாக அரை இறுதியில் விளையாடும் நியூசிலாந்து அணியில் வில்லியம்சன், குப்தில், ரோஸ் டெய்லர், முன்ரோ, ஆண்டர்சன் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளன. சுழற்பந்தில் நாதன் மெக்குல்லம், சான்ட்னெர், இந்தர்சிங் சோதி முத்திரை பதிக்க கூடியவர்கள்.
மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி துடுப்பாட்டம், பந்துவிச்சு ஆகியவற்றில் சமபலத்துடன் உள்ளது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 230 ரன் இலக்கை எடுத்தது. இலங்கைக்கு எதிராக கடைசி ஓவரில் சிறப்பாக பந்துவீசி முத்திரை பதித்தது. 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் ‘குரூப் 1’ பிரிவில் 2–வது இடத்தை பிடித்தது.
2010–ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணியில் கேப்டன் மார்கன், பட்லர், ஜோ ரூட், ஹால்ஸ், ஜேசன் ராய், மொய்ன்அலி, பென் ஸ்டோக்ஸ், ஜோர்டன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். நியூசிலாந்தை வீழ்த்தி 2–வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்துடன் அந்த அணி இருக்கிறது.
Related posts:
|
|