நியூசிலாந்துத் தொடர் இரத்தாகாது?
Wednesday, October 5th, 2016
இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் தொடரின் எஞ்சிய போட்டிகள் கைவிடப்படுமென ஊடகங்களில் தகவல்கள் வெளியான போதிலும், அந்தத் தொடர் கைவிடப்படாது என அறிவிக்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் நிர்வாகக் கட்டமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட லோதா செயற்குழு வழங்கிய பணிப்புரை காரணமாக, இந்தத் தொடர் இடம்பெறாது என்று சில தகவல்கள் வெளியாகின.
நேற்று முன்தினம் மாலை, இரண்டு வங்கிகளுக்குப் பணிப்புரைகளை விடுத்த லோதா செயற்குழுவின் தலைவர் நீதியரசர் லோதா, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் விசேட கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, நிதிகளை மாற்றக்கூடாது என அறிவித்தார். மாநில கிரிக்கெட் சபைகளுக்கு, 10 இலட்சம் இந்திய ரூபாய்கள் அதிகமாக வழங்குவதற்கு எடுக்கப்பட்ட முடிவுக்கே, அவர் தடை விதித்தார்.
எனினும், இந்த உத்தரவை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்குதல் என்ற அடிப்படையில் சில ஊடகங்களும் சில அதிகாரிகளும் தவறாகப் புரிந்துகொள்ள, “வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நியூசிலாந்துத் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகள் இடம்பெறாது. அத்தோடு, உள்ளூர்ப் போட்டிகளும் இடம்பெறாது” என, கிரிக்கெட் சபையின் அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகங்கள் சிலவற்றால் செய்தி வெளியிடப்பட்டது.
ஆனால், நேற்றைய தினம் விளக்கமொன்றை அளித்துள்ள நீதியரசர் லோதா, வங்கிக் கணக்குகளை முடக்குமாறு பணிப்புரை விடுக்கவில்லையெனவும் இரண்டு கொடுப்பனவுகளையே நிறுத்தியதாகவும், எனவே இப்போட்டிகளைக் கொண்டுநடத்துவதில் பிரச்சினைகள் இருக்காது எனவும் அறிவித்தார்.
கிரிக்கெட் சபையின் அதிகாரியொருவரை மேற்கோள்காட்டியே இந்தச் செய்தி வெளியாகியிருந்தாலும், நியூசிலாந்து கிரிக்கெட் சபைக்கு, இவ்விடயம் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என அறிவிக்கப்படுகிறது. எனவே, நியூசிலாந்துத் தொடர், தொடர்ந்தும் இடம்பெறுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டி, எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|