நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கும்படி கோரவில்லை – கும்பிளே !
Wednesday, September 21st, 2016
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கும்பிளே கான்பூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது –
நான் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடும் முதலாவது டெஸ்ட் போட்டி இதுவாகும். இதனால் ஆடுகளத்தின் தன்மை குறித்து தான் உங்களது முதல் மற்றும் இறுதி கேள்வியும் இருக்கும் என்பது எனக்கு தெரியும்.
ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பது உள்பட எந்தவொரு கோரிக்கையும் நாங்கள் வைக்கவில்லை. எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பாடுவார்கள் என்ற சிந்தனையுடன் தான் களம் காணுவோம். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டது போல் இந்த தொடரிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். ஆட்டத்தின் போக்குக்கு தகுந்தபடி எங்களது திட்டத்தை அமல்படுத்துவோம். இந்த சீசன் தொடக்கத்தில் இங்கு மழை பெய்தது. அத்துடன் இந்த ஆடுகளம் அதிகமாக பயன்படுத்தப்படவில்லை.
எனவே இந்த ஆடுகளம் சற்று வித்தியாசமானதாக இருக்கும். எந்த மாதிரியான ஆடுகளம் கொடுக்கப்பட்டாலும், அதற்கு தகுந்தபடி எங்களை மாற்றிக் கொண்டு விளையாட வேண்டும் என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து இருக்கிறோம். நியூசிலாந்து அணி எப்பொழுதும் சிறப்பாக செயல்படும். அவர்கள் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு பயணத்திலும் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். நியூசிலாந்து அணியில் உள்ள 3 சுழற்பந்து வீச்சாளர்களில் 2 பேர் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் முக்கிய பங்கு வகித்தனர்.
இந்திய அணியில் மட்டுமின்றி மற்ற அணிகளிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்களிப்பை அளித்து வருகின்றனர். உள்ளூர் அணி என்பதால் இந்த ஆடுகளம் நமக்கு அனுகூலம் என்றாலும், வெளிநாட்டு அணிகளுக்கும் இங்குள்ள சூழ்நிலை அதிகம் அறியாதது கிடையாது. நியூசிலாந்து வீரர்களில் அதிகம் பேர் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு இங்குள்ள சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்பது தெரியும். எனவே இந்த போட்டி தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். இவ்வாறு கும்பிளே கூறினார்.
Related posts:
|
|