நடிகர் சல்மான் கானின் சகோதரரும் ஐ.பி.எல் சூதாட்டத்தில்: பொலிஸார் விசாரணை!

Saturday, June 2nd, 2018

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஐ.பி.எல் கிரிக்கட் தொடர்பில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி இந்திய பொலிவூட் நடிகர் சல்மான் கானின் சகோதரரான நடிகர்அர்பாஸ் கான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் தொடரின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக அர்பாஸ் கானுக்கு மும்பை பொலிஸார் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

அவர்கள் மேற்கொண்ட விசாரணைகளில் கடந்த ஆண்டு நடைபெற்ற 10ஆவது தொடரின்போது சூதாட்டம் நடந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூதாட்டக் குழுவின் முக்கியமானவரான ஜலான் என்பவரை பொலிஸார் கடந்த மாதம் கைதுசெய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரூ.100 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகமான சூதாட்டம் நடந்திருப்பது தெரியவந்தது.

இதில் நண்பர் ஏற்கனவே இலங்கை, பாகிஸ்தான், துபாய் போன்ற இடங்களில் கிரிக்கட்பந்தய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நடிகர் அர்பாஸ் கானுக்கும் இந்த சூதாட்டத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நடிகர் அர்பாஸ் கானை விசாரணைக்கு வரும்படி மும்பை பொலிஸார் அறிவித்தல் அனுப்பியதற்கமைய அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபல நடிகர் சல்மான் கானின் தம்பியான அர்பாஸ் கான், பல படங்களில் நடித்துள்ளதுடன், படங்கள் தயாரித்து இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

Related posts: