தோல்வியை தவிர்க்க நியூசிலாந்து போராட்டம்!
Monday, October 3rd, 2016
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தவிர்க்க நியூசிலாந்து அணி போராடி வருகிறது.
இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி புகழ் பெற்ற ஸ்டேடியமான கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 316 ரன்களில் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 53 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இந்திய தரப்பில் புவனேஷ்வர்குமார் 5 விக்கெட்டுகளும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், அஸ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து 112 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2–வது இன்னிங்சை விளையாடியது. இந்திய அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதும் ரோகித் சர்மா(82 ரன்கள்) மற்றும் சகா (58 நாட் அவுட்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா வலுவான நிலைக்கு சென்றது. இந்திய அணி 2-வது இன்னிங்சில் 263 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 375 ரன்கள் முன்னிலை பெற்றது.
376 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் துவக்க வீரர் லதம் -குப்தில் ஜோடி நிதானத்துடன் செயல்பட்டது. நியூசிலாந்து அணி 55 ரன்கள் எடுத்திருந்த போது இந்த ஜோடியை அஷ்வின் பிரித்தார். இதன் பிறகு நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. 75 ஓவர்களில் நியூசிலாந்து அணி 190 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது. இன்னும் 2 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் உள்ள நிலையில் வெற்றிக்கு 186 ரன்கள் தேவைப்படுவதால் தோல்வியை தவிர்க்க நியூசிலாந்து அணி போராடி வருகிறது.
Related posts:
|
|