தொடரை வென்றது இந்தியா!

Sunday, August 14th, 2016

இந்தியா- மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 237 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற வெற்றி கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் தீவின் டேரன் சமி தேசிய மைதானத்தில் ஓகஸ்ட் 9ம் திகதி தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஹோல்டர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 353 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 225 ஓட்டங்கள் சேர்த்தது.

128 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 2வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ரகானே 51 ஓட்டங்களுடனும், ரோகித் சர்மா 41 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியதும், ரோகித் சர்மா மேலும் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இந்திய அணி 7வது விக்கெட்டை இழந்து 217 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ரகானே அதிரடியாக விளையாடி 78 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

முதல் இன்னிங்சுடன் சேர்த்து ஒட்டு மொத்தமாக 345 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது இந்தியா. இதனால் மேற்கிந்திய தீவுகளுக்கு 346 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

346 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 108 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது.237 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற வெற்றி கணக்கில் கைப்பற்றியது.

Related posts: