தொடரை கைப்பற்றிய இந்தியா!

Monday, July 9th, 2018

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ரோகித் மற்றும் கோஹ்லியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

இதில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலை வகித்ததால், இன்றைய போட்டி இரு அணிக்கும் வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருந்தது.

அதன் படி இன்று பிரிஸ்டோலில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு துவகக் வீரர்களாக ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் களம் இறங்கினர்.

இருவரும் தொடக்கம் முதலே அதிரடி காட்டியதால், இங்கிலாந்து அணி 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 73 ஓட்டங்கள் குவித்தது.

பட்லர் 34 ஓட்டங்களும், ராய் 67 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஹேல்ஸ் (30) மோர்கன் (6), ஸ்டோக்ஸ் (14), பேர்ஸ்டோவ் (25) ஆகியோரை ஹர்திக் பாண்டியா வீழ்த்த, இறுதியில், இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ஓட்டங்கள் எடுத்தது.

இந்தியா சார்பில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டும், சித்தார்த் கவுல் 2 விக்கெட்டும், சாஹர், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

199 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மறுபுறம், ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த கோஹ்லி பொறுப்புடன் விளையாடினார். இவர்கள் இருவரும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்தனர்.

இதனால் இந்திய அணியின் ரன் விகிதமும் சீரான வேகத்தில் எகிறியது. கோஹ்லி 43 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, ரோகித் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

டி20 அரங்கில் மூன்றாவது சதம் அடித்து உலகசாதனை படைத்தார். மற்றொரு புறம் ஆடிய பாண்ட்யா 14 பந்தில் 33 ஓட்டங்கள் எடுக்க இந்தியா அணி இறுதியாக 18.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் எடுத்து தொடரைக் கைப்பற்றியது.

இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி 5 கேட்சுகள் பிடித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: