தொடரையும் வென்றது தென்னாபிரிக்கா!

Thursday, September 1st, 2016

தென்னாபிரிக்கா- நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா தொடரை, 1-0 என்ற ரீதியில் கைப்பற்றியது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், செஞ்சூரியனில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா, முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், தொடரை, 1-0 என்ற ரீதியில் கைப்பற்றியது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, தமது முதலாவது இனிங்ஸில், எட்டு விக்கெட்டுகளை இழந்து 481 ஓட்டங்களைப் பெற்றபோது, தமது ஆட்டத்தை இடைநிறுத்தியிருந்தது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் ஃபஃப் டு பிளெசிஸ் 112, ஜெ.பி.டுமினி 88, குயின்டன் டி கொக் 82, ஹஷிம் அம்லா 58, ஸ்டீபன் குக் 56 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், நீல் வக்னர் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 214 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் 77, ஹென்றி நிக்கொல்ஸ் 36 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டேல் ஸ்டெயின், கஜிஸ்கோ ரபடா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் வேர்ணன் பிளாந்தர் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, ஏழு விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றபோது தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், குயின்டன் டி கொக் 50, டெம்பா பவுமா ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டிம் சௌதி மூன்று, ட்ரெண்ட் போல்ட் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

400 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து, 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், ஹென்றி நிக்கொல்ஸ் 76, பி.ஜெ.வோட்லிங் 32, டௌ பிறேஸ்வெல் 30 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டேல் ஸ்டெய்ன் ஐந்து, வேர்ணன் பிளாந்தர், கஜிஸ்கோ ரபடா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக குயின்டன் டி கொக் தெரிவானார்.

இப்போட்டியின் முடிவில், டெஸ்ட் போட்டிகளில் 416 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஸ்டெய்ன், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளர்களில் ஏழாவதாக, 414 விக்கெட்டுகளுடன் உள்ள வஸீம் அக்ரமை முந்தினார். இன்னும் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றினால், குறித்த பட்டியலில் ஆறாம் இடத்திலுள்ள ஷோர்ன் பொலக்கை முந்துவதோடு, அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தென்னாபிரிக்க பந்துவீச்சாளராக மாற முடியும்.

இதேவேளை, இப்போட்டி தொடங்குவதற்கு முன்னர், டெஸ்ட் தரவரிசையில் ஏழாம் இடத்திலிருந்த தென்னாபிரிக்கா, தற்போது ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியதுடன், ஆறாம் இடத்திலிருந்த நியூஸிலாந்து, ஏழாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

Related posts: