தென்னாபிரிக்க தொடரிலிருந்து மத்தியூஸ் விலகல்!

தென்னாபிரிக்காவுடனான இரண்டாவது இருபது − 20 போட்டியில் காலில் காயத்திற்கு உள்ளான இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
ஜெஹன்னஸ்பேர்க்கில் நேற்று முன்தினம் நடந்த டி20 போட்டியில் ஓட்டம் பெற ஓடியபோது மத்தியூஸின் காலில் காயம் ஏற்பட்டது.
எனினும் காயத்துடன் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய மத்தியூஸ் கடைசி ஓவருக்கு இரண்டு சிக்ஸர்கள் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
எனினும் காயத்திற்கு உள்ளான மத்தியூஸுக்கு அடுத்து வரும் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி தென்னாபிரிக்காவுடன் நடைபெறவுள்ள கடைசி இருபது-20 போட்டி மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் அஞ்சலோ மத்தியூஸினால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தவிர அவுஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள மூன்று இருபது-20 போட்டிகளிலும் மத்தியூஸினால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக இலங்கை அணி வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இதனால் மத்தியூஸ் நேற்று திங்கட்கிழமை நாடு திரும்ப இருந்ததாக செய்தி வெளியாகியது. மத்தியூஸுடன் தனுஷ்க குணதிலக்க மற்றும் நுவன் பிரதீப்பும் நாடு திரும்பவிருந்தனர்.
எனினும் மத்தியூஸ் தனிப்பட்ட காரணத்திற்காக நாடு திரும்புவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப்பின் கையில் ஏற்பட்ட காயம் காரமாகவே தென்னாபிரிக்க தொடரில் இருந்து விலகியுள்ளார். அதேபோன்று ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க முதுகுப் பகுதியில் உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.
இதன்படி எதிர்வரும் இருபது20 போட்டியில் தினேஸ் சந்திமால் இலங்கை அணியின் தலைவராக செயற்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுடனான அடுத்த இருபது − 20 போட்டி நாளை புதன்கிழமை கேப்டவுனில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
|
|