தென்ஆபிரிக்கா கிரிக்கெட் வாரிய விருது வழங்கும் விழா:  கரீபியன் தொடரில் இருந்து டி வில்லியர்ஸ், ஸ்டெய்ன் மற்றும் பார்னெல் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.!

Wednesday, July 20th, 2016

வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணி வீரர்களைத் தவிர மற்ற அணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். தென்ஆப்பிரிக்கா அணியின் டி வில்லியர்ஸ், ஸ்டெயின், பார்னெல், அம்லா, மில்லர் போன்ற முன்னணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வந்தனர்.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆண்டு விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்கு ஏற்றவகையில் டி வில்லியர்ஸ், பார்னெல் மற்றும் ஸ்டெயின் ஆகியோரை திருப்பி அனுப்ப வேண்டும் என்று தென்ஆப்பி்ரிக்கா கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது.

இந்த கோரிக்கையை ஏற்று ‘சிபிஎல்’ நிர்வாகம் அவர்களை தென்ஆப்பிரிக்கா அனுப்ப முடிவு செய்தது. இதனால் அவர்கள் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடமாட்டார்கள்.
டி வில்லியர்ஸ் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது வரை முடிந்துள்ள போட்டிகளில் அவர் 234 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 58.50 ஆகும்.

ஜமைக்கா தல்லாவாஸ் அணிக்காக விளையாடிய ஸ்டெயின் 8 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பர்னெலும் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணிக்காகத்தான் விளையாடினார். இவர் 6 போட்டிகளில் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

டி வில்லியர்ஸ், பார்னெல் ஆகியோருக்குப் பதிலாக பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் அஹமது ஷேசாத் மற்றும் தென்ஆப்பிரிக்க வீரர் மெர்ச்சன்ட் டி லங்கே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஸ்டெயினுக்குப் பதிலாக ஜமைக்கா தல்லாவாஸ் அணி தென்ஆப்பிரிக்காவின் டேன் பேட்டர்சனை எடுத்துள்ளது. இவர் இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடியது கிடையாது.

இதே தொடரில் விளையாடும் அம்லா, மில்லர் போன்றோரை தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: