துடுப்பாட்ட வீரர்களை விமர்சிக்கும் குணவர்தன!

Wednesday, August 3rd, 2016

இலங்கை ஏ அணியின் துடுப்பாட்ட வீரர்கள் பெரிய ஓட்ட எண்ணிக்கையைப் பெறுவதில்லை என இலங்கை ஏ அணியின் தலைமைப் பயிற்சியாளர் அவிஷ்க குணவர்தன சாடியுள்ளார்.

இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஏ அணிகள் இங்கிலாந்தில் பங்கேற்ற முக்கோணச் சுற்றுத் தொடரின், தான் பங்கேற்ற நான்கு போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே குணர்வர்தனவின் மேற்படி கருத்து வெளியாகியுள்ளது.

சிறந்த துடுப்பாட்ட ஆடுகளங்களில், இலங்கை ஏ அணி, ஒரு முறையே 255 ஓட்டங்களைக் கடந்திருந்ததுடன், தனிநபர் அதிக ஓட்ட எண்ணிக்கையாக, அஞ்செலோ பெரேரா 69 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

மறுபக்கம், ஆறாவது போட்டியில், இலங்கை ஏ அணிக்கெதிராக இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 425 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அதில், பென் டக்கெட் ஆட்டமிழக்காமல் 220 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்த குணர்வதன, இங்கிலாந்து ஏ அணி, 300 அல்லது 400 ஓட்டங்களை தமக்கெதிராகப் பெற்றதை விட, சிறப்பான துடுப்பாட்ட நிலைமைகளை பயன்படுத்தி தமது எந்தவொரு துடுப்பாட்டவீரரும் பெரிய சதங்களைப் பெறாததே ஏமாற்றமாக அமைந்ததாகக் கூறியுள்ளார். இது, துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாய் அமையும் என தான் கருதியதாகவும், ஆனால் தமது துடுப்பாட்ட வீரர்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தெரிவித்ததோடு, இவ்வாறான சிறந்த ஆடுகளங்கள் இலங்கையிலும் இல்லை என மேலும் கூறினார்.

அஞ்செலோ பெரேராவைத் தவிர நிரோஷன் டிக்வெல, பானுக ராஜபக்ஷ ஆகியோர் அரைச் சதங்களைப் பெற்றிருந்த போதும் அதை பெரிய ஓட்ட எண்ணிக்கையாக மாற்றிக் கொள்ள முடிந்திருக்கவில்லை. இந்நிலையில், இனிங்ஸொன்றை எவ்வாறு நகர்த்திச் செல்வது என்று உள்ளூர்ப் போட்டிகளிலிருந்து துடுப்பாட்டவீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: