திருத்தி எழுதப்பட்ட டேவிஸ் கோப்பை நடைமுறைகள்: முழு விவரங்கள்!

Saturday, August 18th, 2018

டேவிஸ் கோப்பையில் புதிய மாறுதல்களை அமல்படுத்த முடிவெடுத்துள்ளது சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎஃப்). இதற்கான வாக்கெடுப்பில் 71.43% ஆதரவு கிடைத்துள்ளது. இதையடுத்து அடுத்த வருடம் முதல் டேவிஸ் கோப்பைக்குப் புதிய வரலாறு எழுதப்படுகிறது.

16 நாடுகள் இடையில் பல்வேறு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு டேவிஸ் கோப்பை போட்டிகள் ஆண்டு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. மீதமுள்ள நாடுகள் 3 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அதில் வெல்வோர் டேவிஸ் கோப்பை இறுதிச் சுற்று ஆட்டங்களுக்கு முன்னேறுகின்றனர்.

இந்நிலையில் ஐடிஎஃப்,  டேவிஸ் கோப்பை போட்டியில் மாறுதல்களை செய்ய முடிவு செய்துள்ளது. குறிப்பாக 18 நாடுகள் பங்கு பெறும் உலகக் கோப்பை டென்னிஸ் போட்டியாக இதை மாற்ற உத்தேசித்துள்ளது. ஏனென்றால் டென்னிஸ் வீரர்களுக்கு ஆண்டு முழுவதும் ஏராளமான போட்டிகள் இருப்பதால் சுமை அதிகமாகிறது எனப் புகார்கள் உள்ளன. இதனால் இதை சீசன் முடிவில் கிராண்ட்ஸ்லாம் போன்ற போட்டியாக நடத்துவதால் சுமை குறையும் எனப் பலர் தெரிவித்திருந்ததனர். இந்நிலையில் அடுத்த வருடம் முதல் புதிய நடைமுறைகள் அமலுக்கு வரவுள்ளன.

ஐந்து செட்களின் அடிப்படையில் இனி டேவிஸ் கோப்பை ஆட்டங்கள் நடைபெறும். எனினும் இறுதிச்சுற்று மட்டும் மூன்று சுற்றுகளை முன்வைத்து நடைபெறும்.

டேவிஸ் கோப்பை: புதிய மாறுதல்களின் விவரங்கள்:

2019 முதல், 18 நாடுகள் ஒருவாரம் நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் பங்கேற்கும். முதல் வருடம் அதாவது அடுத்த ஆண்டு பிரான்ஸில் நவம்பர் 18 முதல் 24 வரை இறுதிச்சுற்று நடைபெறும்.

பிப்ரவரி மாதம் 24 நாடுகள் முதல் சுற்றில் போட்டியிடும். உள்ளூர் மற்றும் வெளிநாடு என்கிற அளவில் இப்போட்டிகள் நடைபெறும். இதிலிருந்து 12 அணிகள் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும். அடுத்த வருடம் பிரான்ஸில் நடைபெறவுள்ள இறுதிச்சுற்று ஆட்டங்களில் 18 நாடுகள் கலந்துகொள்ளும். முந்தைய வருட அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற நாடுகள் இந்த 12 அணிகளுடன் இணைந்துகொள்ளும். அந்த நான்கு நாடுகளும் பிப்ரவரி போட்டிகளில் பங்கேற்காது. மேலும் இரு நாடுகள் வைல்ட் கார்டு மூலம் இந்த இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும்.

18 அணிகளில் கடைசி இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த வருடம் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்க நேரிடும். 5 முதல் 16 இடங்களைப் பெற்ற 12 அணிகள் அடுத்த வருட பிப்ரவரி மாத முதல் சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெறும்.

இறுதிச்சுற்றில் விளையாடும் 18 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒரு பிரிவில் 3 அணிகள். இதிலிருந்து ஆறு வெற்றியாளர்களும் மேலும் இரு அணிகளும் (செட்கள், கேம்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்) என 8 அணிகள் காலிறுதியில் போட்டியிடும். அதன்பிறகு நாக் அவுட் போட்டிகளின் அடிப்படையில் சாம்பியன் அணி தேர்வாகும்.

தற்போது டேவிஸ் கோப்பைக்கான போட்டியில் 4 ஒற்றையர் ஆட்டங்களும் ஒரு இரட்டையர் ஆட்டங்களும் நடைபெறுகின்றன. ஆனால் புதிய நடைமுறையின்படி இரு ஒற்றையர் ஆட்டங்களும் ஒரு இரட்டையர் ஆட்டமும் நடைபெறும். ஒரே நாளில் இவையனைத்தும் நடைபெறும்.

எதற்காக இந்த மாற்றங்கள்?

சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎஃப்) சார்பில், டேவிஸ் கோப்பை மற்றும் ஃபெடரேஷன் கோப்பை என இரு போட்டிகள் மட்டுமே நடைபெறுகின்றன. இதிலிருந்து ஐடிஎஃப்-க்குப் போதிய வருமானம் கிடைப்பதில்லை.

டேவிஸ் கோப்பையில் கொண்டுவரப்படும் இந்த மாற்றங்களை முன்வைத்து அடுத்த 25 வருடங்களுக்கு 21 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ( 3 பில்லியன் டாலர்) முதலீடு செய்ய ஸ்பெயின் கால்பந்து வீரரான ஜெராட் பிக் தலைமையிலான நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. அமெரிக்க பில்லியனரும் இந்தியன் வெல்ஸ் போட்டியின் உரிமையாளருமான லேரி எல்லிஸனும் முதலீட்டாளர்களில் ஒருவராக உள்ளார். இந்த மாற்றங்களால் ஐடிஎஃப்-க்கு அதிக அளவிலான வருமானம் கிடைக்கவுள்ளது.

இந்த மாற்றங்களால் டேவிஸ் கோப்பை போட்டியில் பிரபல வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடிஎஃப் மேலும் வெளியிட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்த தகவல்கள்:

Related posts: