தலைமை பொறுப்பிலிருந்து விலகுகின்றாரா கோலி?

Monday, September 13th, 2021

டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு இந்திய குறைந்த ஓவர் கிரிக்கெட் அணிக்கு அதாவது ஒருநாள், டி20 அணிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

விராட் கோலியே குறைந்த ஓவர் கிரிக்கெட் அணி கேப்டன் பதவியிலிருந்து விலகுவார் என்று ஒரு தரப்பும், அப்படி இல்லாவிட்டாலும் ரோகித் சர்மாவே நியமிக்கப்படலாம் என்றும் மற்றொரு தரப்பும் கூறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மூன்று வடிவங்களிலும் வெற்றிகளை குவித்து ஆல் டைம் கிரேட் கேப்டன்களில் ஒருவராக கோலி திகழ்வது குறிப்பிடத்தக்கது.

குறைந்தது டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன, காரணம் ரோகித் சர்மாவின் ஐபிஎல் வெற்றிகள் மற்றும் இந்திய டி20 அணிக்காக கோலி இல்லாத போது ரோகித் சர்மா பிரமாதமாக சிலபல வெற்றிகளைப் பெற்று தந்துள்ளார், இலங்கையில் நடைபெற்ற நிதாகஸ் டிராபி ஒரு எடுத்துக் காட்டு.

மேலும் கோலி தன் பேட்டிங்கில் கவனம் செலுத்தப் போவதாகவும் அதற்கு கேப்டன்சி சுமை இடையூறாக இருப்பதாகவும் கருதுவதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து முன்னணி ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் பிசிசிஐ வட்டாரத்தை மேற்கோள் காட்டி கூறப்பட்டிருப்பதாவது, “விராட் கோலியே இந்த அறிவிப்பை வெளியிடுவார். பேட்டிங்கில் கவனம் செலுத்த விரும்புகிறார் கோலி, தன்னுடைய பழைய பார்மை மீட்க அவர் இந்த முடிவுக்கு வருவார் என்றும் உலகின் சிறந்த பேட்ஸ்மென் என்ற தன் பழைய நிலையை எட்டவே அவர் விரும்புகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

கோலி கேப்டன்சி மீது உள்ள விமர்சனம் ஒரு ஐசிசி கோப்பையைக் கூட வென்றதில்லை என்பதே. கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோற்றது கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. மேலும் அணித்தேர்வு விவகாரங்களில் கோலிக்கு ஏகப்பட்ட தடுமாற்றங்கள் உள்ளது என்றும் உணரப்பட்டுள்ளது. கண்டபடிக்கு அணியில் ஆட்களை மாற்றிக் கொண்டிருக்கிறார் என்ற விமர்சனங்களும் அவர் மீது உண்டு

000

Related posts: