தரப்படும் ஆடுகளத்தில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம் – ரவி சாஸ்திரி !

Thursday, July 26th, 2018

ஆடுகளம் மோசம், சூழ்நிலை சரியில்லை என காரணம் கூறமாட்டோம். எங்களுக்கு தரப்படும் ஆடுகளத்தில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம்,’’ என, ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வரும் ஆக. 1ல் பர்மிங்காமில் துவங்குகிறது. இதற்கு தயாராக இந்திய அணி, எசக்ஸ் அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது. ஆடுகளத்தில் அதிகமான புற்களும், பீல்டிங் பகுதிகள் போதிய புற்கள் இல்லாமல் மோசமாக காணப்பட்டதால் அதிருப்தி அடைந்த இந்திய அணி நிர்வாகம், வீரர்கள் காயம் அடைவதை தடுக்கும் வகையில் இப்போட்டியை மூன்று நாட்களாக குறைத்தது. இதுகுறித்து இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, 56, கூறியது:

பயிற்சி போட்டிக்கான ஆடுகளத்தில் அதிக புற்கள் இருந்தன. இதை சற்று குறைக்கவா என பராமரிப்பாளர் கேட்டார். எதையும் செய்ய வேண்டாம், அப்படியே விட்டு விடுங்கள். தவிர இது உங்கள் முடிவு என்றேன். எங்களைப் பொறுத்தவரையில் ஒரே கொள்கையில் தான் உள்ளோம்.

நீங்கள் கொடுக்கும் ஆடுகளத்தில் விளையாடுகிறோம். இதுகுறித்து கேள்விகள் கேட்கமாட்டோம். அதேபோல எங்கள் மண்ணில் போட்டிகள் நடக்கும் போது, நீங்களும் கேள்வி கேட்கக் கூடாது. இத்தொடரில் ஆடுகளம் மோசம், சூழ்நிலை சரியில்லை, வானிலை கைகொடுக்கவில்லை என்றெல்லாம் காரணம் கூறப் போவது இல்லை. எங்களது இலக்கு இங்கிலாந்து அணியை வீழ்த்துவது மட்டும் தான்.

சென்ற இடமெல்லாம் சிறப்பாக விளையாடுவதில் பெருமை கொள்ள விரும்புகிறோம். அன்னிய மண்ணில் அசத்தும் சிறப்பான அணி இந்தியா என பெயர் பெற வேண்டும். இது வேறமாதிரி இந்திய அணி, புகார் தெரிவிக்க விரும்ப மாட்டோம்.

முதல் டெஸ்ட் போட்டி நடக்கும் பர்மிங்காம் மைதானத்தில் கூடுதலாக பயிற்சியில் ஈடுபட வேண்டும். தவிர இங்கு வெப்பமும் அதிகமாக இருந்தது. இதனால் தான் பயிற்சி ஆட்டத்தை மூன்று நாட்களாக குறைத்தோம். ஏனெனில் இப்போட்டிக்கு இரண்டு நாட்கள் போதும்.

மூன்று அல்லது நான்கு நாட்கள் விளையாடுவதா, வேண்டாமா என்பதை தொடரில் பங்கேற்க வரும் அணி தான் முடிவு செய்யும். இதுகுறித்து முதல் நாள் தான் முடிவெடுத்தோம். ஆனால் நான்கு நாட்களுக்கு டிக்கெட் விற்று விட்டோம் என்றதால், மூன்று நாள் விளையாடுகிறோம்.

இதனால் முதல் டெஸ்ட் நடக்கும் பர்மிங்காமிற்கு முன்னதாகச் சென்று, கூடுதல் பயிற்சியில் ஈடுபடலாம், சூழ்நிலைக்கு ஏற்ப வீரர்கள் தங்களை மாற்றிக் கொள்ளவும் முடியும்.  இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

Related posts: